பிரதமர் மோடி மகத்தான பணியைச் செய்கிறார் என்று பாராட்டியதுடன், அவருக்கு தொலைபேசி மூலமாக பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.
இந்தியா மீது அமெரிக்கா 50 சதவீதம் ஏற்றுமதி வரியை விதித்தது முதலே இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்குமான உறவில் ஏராளமான முரண்பாடுகள் உருவாகி வருகிறது. சுமார் 7.5 லட்சம் கோடி வர்த்தகம் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் வரியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்திய பிரதமர் மோடியின் 75வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. பாஜக தொண்டர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தது மட்டுமின்றி உலகத் தலைவர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இதையடுத்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பும் பிரதமர் மோடிக்கு தொலைபேசி வாயிலாக வாழ்த்து கூறினார்.
இதுதொடர்பாக, இந்திய பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் எனது 75வது பிறந்தநாளுக்கு தொலைபேசி வாயிலாக வாழ்த்து கூறியதற்கு மிக்க நன்றி எனது அருமை நண்பர் அதிபர் ட்ரம்ப். இந்தியா – அமெரிக்கா விரிவான மற்றும் உலகளாவிய கூட்டாண்மையை புதிய உயரத்திற்கு கொண்டு செல்ல நானும் உங்களைப் போல உறுதியாக உள்ளேன். உக்ரைன் மோதலுக்கு உறுதியான தீர்வு காணும் உங்கள் முயற்சிக்கு ஆதரவுகள் என்று பதிவிட்டுள்ளார்.

