சென்னையில் டி.ஜி.பி அலுவலகம் அருகே ஏர்போர்ட் மூர்த்தி மீது தாக்குதல்
தாக்குதலில் ஏர்போர்ட் மூர்த்தியின் சட்டை கிழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சமீபத்தில், பா.ம.க நிர்வாகி ஒருவரின் வீட்டில் பைப் வெடிகுண்டு வீசப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக புகார் அளிக்க பா.ம.க-வைச் சேர்ந்த எம்.எல்.ஏ. அருள் டி.ஜி.பி அலுவலகத்திற்குச் சென்றார். அவருக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக ஏர்போர்ட் மூர்த்தி சென்றிருந்தார். இந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக இந்த தாக்குதல் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
டி.ஜி.பி அலுவலகம் முன்பு ஊடகவியலாளர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில், “வி.சி.க வாழ்க” என முழக்கமிட்ட ஒரு நபர், திடீரென ஏர்போர்ட் மூர்த்தியைத் தாக்கத் தொடங்கினார். இந்த தாக்குதலில் மூர்த்திக்கு பலத்த அடி விழுந்ததுடன், அவரது சட்டை கிழிக்கப்பட்டது. நிலைமை கைமீறிப்போகும் சூழலில், மூர்த்தி தனது பாக்கெட்டில் இருந்து ஒரு சிறிய கத்தியை எடுத்து தற்காத்துக் கொள்ள முயன்றார். இதையடுத்து, தாக்குதல் நடத்திய நபர் பதிவு எண் இல்லாத மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றார்.
தாக்குதலுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஏர்போர்ட் மூர்த்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மீது சரமாரியான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். தன்னை கொலை செய்ய திருமாவளவன் முயற்சிப்பதாக அவர் குற்றம் சாட்டினார். இது தொடர்பாக இரண்டு முறை காவல்துறையில் புகார் அளித்தும், அதனை ஏற்க காவல்துறை மறுத்துவிட்டதாக மூர்த்தி தெரிவித்தார்.
மேலும், இந்த தாக்குதல் குறித்து காவல்துறைக்கு முன்பே தெரியும் என்றும், திருமாவளவனுக்கு எதிராக புகார் அளித்தால் நிலைமை மேலும் மோசமாகலாம் என்று காவல்துறையினர் தனக்கு அறிவுறுத்தியதாகவும் மூர்த்தி குற்றம் சாட்டினார். சமூக வலைதளங்கள் மற்றும் பொது மேடைகளில் திருமாவளவனை விமர்சித்தது தொடர்பாகவே தன்னைத் தாக்கியவர்கள் கேள்வி எழுப்பியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

