சின்னசேலத்தில் தனியார் பள்ளி மாணவி இறந்த விவகாரம் தொடர்பான போராட்டம் பயங்கர கலவரமானது. கலவரக்காரர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி கலவரம்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 மாணவி ஸ்ரீமதி தற்கொலை வழக்கு தொடர்பாக, மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில், நேற்று போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் பள்ளி முழுமையாக சூறையாடப்பட்ட நிலையில், பள்ளியில் உள்ள வாகனங்கள், பள்ளி வகுப்பறை உள்ளிட்ட அனைத்தையும் போராட்டக்காரர்கள் தீ வைத்து கொளுத்தினர். இந்த போராட்டத்தின் போது, கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டத்தில் 50க்கும் மேற்பட்ட போலீசார் படுகாயமடைந்தனர். அப்பகுதி முழுவதும் பதற்றமான சூழல் நீடித்து வருவதால் வஜ்ரா வாகனங்களுடன் 800க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சேலத்தில் செல்லும் தேசிய நெடுஞ்சாலை முற்றிலுமாக போக்குவரத்து தடை செய்யப்பட்டு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கலவரம் தொடர்பாக இன்று வரை 325 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது சுமார் 10ம் மேற்பட்ட பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வன்முறையில் தொடர்புடையவர்களை கைது செய்ய போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி கைது செய்து வருகின்றனர்.

