2026 சட்டமன்றத் தேர்தல் களம் இதுவரை இல்லாத புதிய சூழல் உருவாகி இருப்பதாக தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற பெயரில் கடந்த 2024ஆம் ஆண்டு பிப்ரவரி 2ஆம் தேதி கட்சித் தொடங்கி, விஜய் தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்தார். தொடர்ந்து கட்சியின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியிலும், 2ஆவது மாநாடு மதுரையிலும் நடைபெற்றது.
அடுத்தக்கட்டமாக தேர்தல் சுற்றுப்பயணத்தை தொடங்கிய விஜய், திருச்சி தொடங்கி, அரியலூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கரூர் ஆகிய மாவட்டங்களில் பரப்புரை செய்தார். கரூரில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்ததை அடுத்து, அவரது தேர்தல் சுற்றுப்பயணம் தடைப்பட்டது.
இதனிடையே, பூத் கமிட்டி பணிகள், உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்ட தேர்தல் பணிகள் முடுக்கிவிடப்பட்டன. இந்நிலையில், கட்சியின் 3ஆவது ஆண்டு தொடக்க விழா இன்று காலை 11 மணிக்கு பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. இவ்விழாவிற்கு தலைமையேற்று கட்சி கொடியேற்றும் விஜய், கொள்கை தலைவர்களுக்கு மரியாதை செலுத்தவுள்ளார்.
இதற்கிடையே, மூன்றாம் ஆண்டையொட்டி தொண்டர்களுக்காக விஜய் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “நம் உயிரனைய இயக்கமான தமிழக வெற்றிக் கழகத்தின் மகிழ்ச்சிகரமான மூன்றாம் ஆண்டு, இன்று தொடங்குகிறது. இரண்டு ஆண்டுகளை இயல்பாகவும், இயல்பு தாண்டியும் நிறைவு செய்து, நீள்கிறது நம் அரசியல் பெரும் பயணம். முதன்மை அரசியல் சக்தியாகப் பரிணமிக்கும் முன்பே மக்கள் இயக்கமாக, மக்களோடு மக்களாகக் கலந்து நின்றவர்கள் நாம். இதை நாடறியும். நல்லவர்கள் அறிவார்கள்.
ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்லலாம். சலனங்களைப் புறந்தள்ளி, சமநிலை தவறாத, அளக்கவியலாத ஆழ்கடல் த.வெ.க.; எவராலும் விலக்க இயலாத விரிவானம் த.வெ.க.; அத்தனை இலக்குகளையும் அர்ப்பணிப்புடன் வெல்லும், சாமானிய மக்களுக்கான அதிகார அரசியலின் வெற்றிப் போர்முரசம் த.வெ.க.
2026 சட்டமன்றத் தேர்தல் களம், இதுவரை இல்லாத புதிய சூழலைச் சுமந்து நிற்கிறது. இதற்கு ஒரே காரணம் நமது அரசியல் வருகை மட்டுமே என எல்லோரும் சொல்கின்றனர்.
எனவே இச்சூழலில், களத்தை நமதாக்கி, தேர்ந்த தெளிவுடனும் திறன்மிக்க நுட்பத்துடனும் தேர்தல் அரசியல் வெற்றியின் வாயிலாக, அதிகார அரசியல் அங்கீகாரம் நோக்கிச் செல்வோம். அனைத்து மக்களின் அமோக ஆதரவுடன், தீர்க்கமுடன் ஒற்றுமையாகக் களமாடி, ஆட்சி பீடத்தைக் கைக்கொள்ளும் ஜனநாயக இலக்கை உறுதியாக வெல்வோம்.” என்றார்.

