மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை நடை நேற்று மாலை, சரண கோஷங்கள் முழங்க திறக்கப்பட்டது.
கார்த்திகை 1ம் தேதி முதல், 41 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறும் பூஜை, சபரிமலையில் ஒரு மண்டல காலமாகும்.
இதற்காக நேற்று மாலை 5:00 மணிக்கு மேல் சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடை திறந்த போது பக்தர்கள் சரண கோஷம் எழுப்பினர்.
தொடர்ந்து கோவிலை வலம் வந்த மேல் சாந்தி 18 படிகள் வழியாக வந்து ஆழி குண்டத்தில் நெருப்பு வளர்த்தார்.
பின் 18 படிகளுக்கு கீழே இருமுடி கட்டுடன் நின்று கொண்டிருந்த புதிய மேல் சாந்திகள் சபரிமலை பிரசாத் நம்பூதிரி மாளிகைப்புறம் மனு நம்பூதிரியை கைப்பிடித்து அழைத்து வந்தார்.
அய்யப்பன் சன்னிதி முன்புறம் வந்ததும் அவர்களுக்கு திருநீறு பிரசாதமாக வழங்கப்பட்டது.
புதிய மேல் சாந்தி மாலை 6:30 மணிக்கு சன்னிதி முன் நடந்த சடங்கில் சபரிமலை புதிய மேல் சாந்தி பிரசாத் நம்பூதிரிக்கு தந்திரி மகேஷ் மோகனரரு அபிஷேகம் நடத்தி சன்னிதிக்குள் அழைத்து சென்றார்.
இதுபோல மாளிகைப்புறம் கோவில் முன்புறம் நடந்த சடங்கில் மனு நம்பூதிரிக்கு அபிஷேகம் நடத்தி கோவிலுக்குள் அழைத்துச் செல்லப்பட்டார்.
நேற்று வேறு விசேஷ பூஜைகள் எதுவும் நடைபெறவில்லை, இரவு 11:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது.
இன்று அதிகாலை 3:00 மணிக்கு புதிய மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றியதும் இந்த ஆண்டுக்கான மண்டல காலம் துவங்கியது.
தொடர்ந்து தந்திரி மகேஷ் மோகனரரு அய்யப்பன் சிலையில் அபிஷேகம் நடத்திய பின் நெய்யபிஷேகத்தை துவங்கி வைத்தார்.
டிசம்பர் 27 வரை எல்லா நாட்களிலும் அதிகாலை, 3:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 3:30 முதல், 11:30 மணி வரை நெய்யபிஷேகம் நடைபெறும்.
3:30க்கு கணபதி ஹோமம், 7:30க்கு உஷ பூஜை, 12:00-க்கு களபாபிஷேகம், கலசாபிஷேகம், 12:-30க்கு உச்சபூஜை முடிந்து மதியம், 1:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.
ஆன்லைன் முன்பதிவு மீண்டும் மதியம் 3:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு மாலை, 6:30-க்கு தீபாராதனை, இரவு, 7:00 மணிக்கு புஷ்பாபிஷேகம், 9:30 மணிக்கு அத்தாழபூஜை நடைபெறும். 11:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.
தினமும் ஆன்லைன் முன்பதிவில், 70,000 பக்தர்களும், ஸ்பாட் புக்கிங்கில், 20,000 பக்தர்களும் அனுமதிக்கப்படுகின்றனர்.

