தாம்பரம் முதல் கடற்கரை வரை ரயில் பயணிகளுக்கு கட்டணமில்லா பேருந்து சேவையை தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்பட்ட நடைமேடைகள் 10 மற்றும் 11ல் தூண்கள் எழுப்பப்பட்டு கட்டுமானப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இதனால் புறநகர் மின்சார ரயில்கள் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்பட்டு வந்த 5 மற்றும் 6-ம் நடைமேடைகளில் இருந்து இயக்கப்பட்டு வருகின்றன.
மேலும், ரயில் போக்குவரத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளதுடன், அவற்றின் எண்ணிக்கையும் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. மின்சார ரயில் போக்குவரத்து குறைக்கப்பட்டுள்ளதால் சென்னையில் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, தினமும் அலுவலகம் செல்வோரும் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்களும் காலை மற்றும் மாலை வேளையில் லீடு திரும்பும்போதும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
புறநகர் ரயில் சேவை வெகுவாக குறைக்கப்பட்டுள்ளதால் மாநகர பேருந்துகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. இதனால் பொதுமக்கள் அன்றாடம் வியர்வை மழையில் நனைந்தபடியே அலுவலகம் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
இந்த நிலையில். பயணிகளின் சிரமத்தைக் குறைக்க தெற்கு ரயில்வே மாற்று ஏற்பாடுகளை செய்துள்ளது. அதாவது ரயில் பயணிகள் இலவசமாக பயணிக்கும் வகையில் சென்னை மாநகரப் பேருந்துகளை இயக்க தெற்கு ரயில்வே முடிவு எடுத்துள்ளது.
இதையும் படிங்க: பாஜகவில் இருந்து 30 பேர் எம்எல்ஏக்கள்; வி.பி. துரைசாமி அமைச்சர் – நயினார் நாகேந்திரன் பேச்சால் சலசலப்பு
இதன்படி, இன்றிலிருந்து காலை 6:40 மணி முதல் 9:40 மணி வரை 7 நிமிட இடைவெளியில் தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை வரை மாநகர பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துகள் தாம்பரம் சானடோரியம், குரோம்பேட்டை, பல்லாவரம், திரிசூலம், கிண்டி, எழிலகம், தலைமைச் செயலகம், பாரிமுனை ஆகிய இடங்களில் நின்று செல்லும். இந்த பேருந்துகளில் ரயில் டிக்கெட் அல்லது சீசன் பாஸ் வைத்திருக்கும் பயணிகள் கட்டணம் எதுவும் செலுத்தாமல் இலவசமாக பயணிக்கலாம் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
காலை 6:30, 6:37, 6:44, 7:05, 7:12, 7:26, 7:33, 7:40,7:54, 8:01, 8:15,8:22, 8:29, 8:43 ஆகிய நேரங்களில் சிறப்பு பேருந்துகள் அண்ணா சாலை, சேப்பாக்கம், தலைமை செயலகம் வழியாக செல்லும். 6:51, 7:19, 7:47,8:08,8:36, ஆகிய நேரங்களில் இயக்கப்படும் சிறப்பு பேருந்துகள் கிண்டி, தி.நகர், எழும்பூர், சென்ட்ரல், பாரிமுனை வழியாக இயக்கப்படும் .
மேலும் மின்சார ரயில்களில் கூடுதலாக 5 பெட்டிகள் இணைத்து நெரிசல் நேரங்களில் (பீக் ஹவர்ஸ்) இயக்கப்படும் எனவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் மாநகர பேருந்துகளில் தெற்கு ரயில்வேயின் டிக்கெட் பரிசோதகர்களும் பணியில் இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

