‘யாரும் ஏற்றுக் கொள்ளாததால் செங்கோட்டையன் தவெகவுக்குச் சென்றுள்ளார். அவர் செல்லாக்காசு, திருவிழாவில் காணாமல் போன ஆடாக நாங்கள் கருதுகிறோம்’’ என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு தெரிவித்தார்.
மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜு, ‘‘ கருத்துக் கணிப்புகள் தற்போது அதிமுகவுக்கு சாதகமாக வருகிறது. இந்த கருத்துக் கணிப்புகளை பார்த்து திமுக கலக்கமடைந்துள்ளது.
திமுக தனது கூட்டணிக் கட்சிகளை அடிமைபோல் வைத்துள்ளது. மக்கள் பிரச்சினைகளைப் பற்றி வாய் திறக்காமல் உள்ளனர். பாஜக கூட்டணியில் திமுக இருந்தபோது அவர்கள் சொன்னதையெல்லாம் நிறைவேற்றினார்கள்.
செங்கோட்டையன் செல்லாக் காசு ஆகிவிட்டார். அவரது பேச்சை பெரிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. அவரை எந்தக் கட்சியும் ஏற்றுக் கொள்ளாததால் வேறு வழியில்லாமல் தவெகவுக்குச் சென்றுள்ளார்.
ஊர் திருவிழாவில் காணாமல் போன ஆட்டை நாங்கள் தேடுவதில்லை. உடனே செங்கோட்டையனை செல்லூர் ராஜு சாடல் என்று போட்டுவிடுவீர்கள். அவரையும், என்னையும் வைத்து கார்ட்டூன் போட்டுவிடுகிறீர்கள். சும்மா விடுங்க சார்’’ என்றார்.

