அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், மக்களை காப்போம்: தமிழகத்தை மீட்போம் பிரச்சாரம் மற்றும் அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்ட 16 தேர்தல் வாக்குறுதிகள் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ள தாக்கம், தற்போது ஆற்றி வரும் தேர்தல் பணிகள் மற்றும் ‘விடியா ஆட்சி: உங்கள் வீட்டு பில்-லே சாட்சி’ பிரச்சாரம் எத்தனை வீடுகளை சென்றடைந்தது என்பது குறித்து மாவட்ட செயலாளர்களிடம் கேட்டறிந்தார்.
பின்னர் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்க வேண்டிய தொகுதிகள் எண்ணிக்கை முடிவாகி இறுதி வடிவம் பெற்றுள்ளது. விரைவில் அறிவிக்கப்படும். அதிமுக சார்பில் 3 கட்டங்களாக 16 தேர்தல் வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதை வீடு வீடாக கொண்டு போய் சேர்க்க வேண்டும். அதற்கான துண்டு பிரசுர மாதிரியும் உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் ‘விடியா ஆட்சி: உங்கள் வீட்டு பில்-லே சாட்சி’ பிரசாரத்தையும் தீவிரப்படுத்துங்கள்.
தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன், திமுகவுக்கு ஆதரவாக செயல்படும் அதிகாரிகள் தொடர்பாகவும், தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாகவும் அந்தந்த மாவட்ட அதிமுக வழக்கறிஞர் அணியுடன் இணைந்து தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆளுங்கட்சி பண பலம், அதிகார பலத்தை பிரயோகிக்கும். அதை அதிமுகவினர் அனுமதிக்கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.

