தங்க நகை வியாபாரியிடம் ரூ. 30 லட்சத்தை வழிப்பறி செய்துவிட்டு மது விருந்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நான்கு பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னை வேளச்சேரி காந்தி நகரில் வசித்து வருபவர் உத்தம்சன் (65). இவர் கடந்த 40 வருடமாக ஜவுளி கடை நடத்தி வருகிறார். இவரின் சொந்த மாநிலம் ராஜஸ்தான். ஜவுளி வியாபாரத்தோடு, பழைய தங்க நகைகளை வாங்கும் தொழிலிலும் இவர் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், தனியார் நகை அடமானம் நிறுவனத்தில் வேலை செய்யும் சென்னையைச் சேர்ந்த சதீஷ் என்பவர், உத்தம்சனுக்கு பழைய தங்க நகைகளை விற்பவர்கள் குறித்த விவரங்களை தெரிவித்து அதற்கு ஏற்ப கமிஷன் வாங்கி வந்தார்.
இந்த நிலையில், உத்தம்சனை செல்போனில் தொடர்பு கொண்ட நபர் ஒருவர் தன்னிடம் 200 கிராம் தங்க நகைகள் இருப்பதாகவும், அதை விற்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். உடனே உத்தம்சன், ”என்னுடைய செல்போன் எண்ணை உங்களுக்கு கொடுத்தது யார்?” என விசாரித்திருக்கிறார்.
அப்போது அந்த நபர், சேலையூரில் உள்ள தனியார் நகைகளை அடகு வைக்கும் நிறுவனத்தில் உள்ள ஒருவர் உங்களுடைய எண்ணை கொடுத்ததாக கூறி இருக்கிறார். அதன் பிறகு பழைய தங்க நகைகளுக்கான விலையை பேசி இருவரும் முடித்த நிலையில், அன்றைய தினம் மாடம்பாக்கம் மின்வாரிய அலுவலகத்துக்கு அருகே வரும்படி அந்த நபர் தெரிவித்து இருக்கிறார்.
அதன்படி உத்தம்சன் 30 லட்சம் ரூபாயை பைக்கில் எடுத்துக் கொண்டு தங்க நகைகளை வாங்க சென்றுள்ளார். அப்போது மேடவாக்கம் பகுதியில் சென்ற போது உத்தம்சனின் இருசக்கர வாகனம் பழுதடைந்து உள்ளது. இதையடுத்து தனக்கு ஏற்கெனவே அறிமுகமான சதீஷுக்கு போன் செய்து இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
இதையடுத்து சதீஷ் இருசக்கர வாகனத்தில் உத்தம்சனை அழைத்துக் கொண்டு மாடம்பாக்கம் மின்வாரிய அலுவலகம் பகுதிக்கு சென்றிருக்கிறார். அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் இருவரையும் கத்தி முனையில் மிரட்டி, தாக்கிவிட்டு 30 லட்சம் ரூபாயை வழிபறி செய்து விட்டு தப்பிச் சென்றது.
இதனால் அதிர்ச்சியடைந்த உத்தம்சன் சேலையூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் உத்தம்சனிடம் நகைகளை விற்பதாக தொடர்பு கொண்டவரின் செல்போன் எண்ணை வாங்கி விசாரித்தனர். அப்போது அந்த செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்துள்ளது.
இதையடுத்து அந்த செல்போன் சிக்னலை ஆய்வு செய்த போது, ஈசிஆரில் உள்ள ஒரு விடுதிக்கு நெருக்கமாக காண்பித்துள்ளது. இதையடுத்து அங்கு சென்ற தனிப்படை போலீசார் அறையில் மது விருந்தில் ஈடுபட்டு கொண்டிருந்த நான்கு பேரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ஜெயக்குமார், விக்கி, கார்த்திக், ஆகியோர் பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதும், அற்புதம் கண்ணகி நகர் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்துது. மேலும், அவர்களிடமிருந்து சுமார் ரூ. 25 லட்சத்தை சேலையூர் போலீசார் பறிமுதல் செய்தனர். மீதி பணத்தை கொள்ளையர்கள் வரும் வழியில் தவற விட்டதாக போலீசார் தரப்பில் தெரிவித்தனர். மேலும் கைது செய்யப்பட்ட நான்கு பேரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில், ஜெயக்குமார் மற்றும் விக்கி ஆகிய இருவரும் படித்த பட்டதாரிகள் என்பது தெரிய வந்தது. கார்த்திக் மற்றும் அற்புதராஜ் மீது அடிதடி மற்றும் கொலை வழக்குகள் இருப்பதும் தெரிய வந்தது.
ஜெயக்குமாருக்கும், விக்கிக்கும் சரியான வேலை கிடைக்காததால் குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க திட்டம் தீட்டி உள்ளனர். மேலும், ஜெயக்குமார் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு உத்தம்சனிடம் பழைய நகையை விற்றபோது அவரிடம் இருந்து செல்போன் எண்ணை வாங்கி வைத்துள்ளார். தற்போது அதை வைத்துக்கொண்டு கார்த்திக் மற்றும் அற்புதராஜ் உடன் இணைந்து இந்த வழிப்பறி சம்பவத்தை அரங்கேற்றியதும் விசாரணையில் தெரிந்தது.
இதையடுத்து காவல்துறையினர் அந்த நான்கு பேர் மீதும் வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

