பல்லாவரம் இரட்டைக் கொலை வழக்கில் காவல் துறையினர் தனிப்படை அமைத்துக் குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரத்தை அடுத்த முடிச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 20). இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. சில வழக்குகளில் தண்டனை பெற்று சிறையில் இருந்த அவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியே வந்த நிலையில் திரிசூலம் பகுதியில் மணி என்பவரது வீட்டில் தங்கியிருந்தார். அவருடன் 17 வயது சிறுவனும் தங்கியிருந்தார்.
இந்த நிலையில் ஆறுமுகம் வழக்கம் போல் மது அருந்தி விட்டு உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவரது வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள் அவரையும், சிறுவனையும் சரமாரியாக வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பியது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்ற பல்லாவரம் காவல் துறையினர் இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதைத் தொடர்ந்து, இந்த இரட்டை கொலை சம்பவம் குறித்து வழக்குப் பதிவுச் செய்த காவல் துறையினர், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், “முன் விரோதம் காரணமாக இருவரும் கொலை செய்யப்பட்டுள்ளனர். கொலை செய்யப்பட்ட ஆறுமுகம் மீது ஏற்கனவே குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன” என தெரிய வந்துள்ளது.
மேலும், சம்பவ இடத்திற்கு தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். அதே போல் அந்த குடிசை வீட்டில் கடந்த ஒரு வாரமாக 5 நபர்கள் தங்கியிருந்த நிலையில் நேற்றிரவு இரண்டு பேர் மட்டுமே தங்கியிருந்த போது தான் இந்த கொலை சம்பவம் அரங்கேற்றியுள்ளதாக காவல் துறையினர் கூறுகின்றனர்.
17 வயது சிறுவனின் முகம் முற்றிலும் சிதைக்கப்பட்ட நிலையில் அவர் யார்? என்பது குறித்து அடையாளம் காணும் முயற்சியிலும் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். கொலை செய்யப்பட்ட ஆறுமுகத்தின் மீது சுங்குவார்சத்திரம் பகுதியைச் சேர்ந்த ஆல்பர்ட் கொலை செய்த வழக்கும், பீர்க்கங்கரணை காவல் நிலையத்தில் அடிதடி வழக்கும் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்ய காவல்துறை சார்பில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

