கரூர் துயர சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ள நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு விசாரிக்க இன்று காலை கரூர் புறப்பட்டு சென்றுள்ளனர்.
கடந்த சனிக்கிழமை அன்று கரூரில் தவெக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி பெரும் துயரில் முடிந்தது.
இந்த நிகழ்வில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் கரூர் துயர சம்பவம் குறித்து விசாரிக்க தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கு பாஜக எம்.பி ஹேமமாலினி தலைமை வகிக்கிறார். இந்த குழுவில் அனுராக் தாகூர், தேஜஸ்வி சூர்யா, பிரஜ் லால் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
இவர்கள் கரூர் செல்வதற்காக கோவை வந்து சேர்ந்தனர். இந்நிலையில் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஹேமமாலினி, எங்கள் பாஜக தேசிய தலைவர் அவர்கள் 8 பேர் கொண்ட எம்.பிக்கள் குழுவை அமைத்திருக்கிறார்.
நாங்கள் அனைவரும் இங்கே வருகை புரிந்துள்ளோம். எங்களில் மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்.பிக்கள் இருக்கின்றனர். கரூருக்கு நேரில் செல்கிறோம்.
சம்பவம் எப்படி நடந்தது என்பது தொடர்பாக விசாரிக்க உள்ளோம். இதுபோன்ற நிகழ்வுகள் இனியும் நடக்கக் கூடாது. முதலில் உறவுகளை இழந்து தவித்து கொண்டிருக்கும் குடும்பங்களுக்கு எங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்.
கரூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவுள்ளோம். மேலும் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து அறிக்கை தயாரிக்க இருக்கிறோம். அதன்பிறகு உங்களை சந்திக்கிறோம் என்று ஹேமமாலினி தெரிவித்தார்.

