சென்னை ரேஸ் கிளப்-பிடம் இருந்து சொத்து வரி பாக்கியை வசூலிக்கும் நடவடிக்கைகளை நான்கு வாரங்களுக்கு நிறுத்தி வைக்க சென்னை மாநகராட்சிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை ரேஸ் கிளப்பிற்கு சொந்தமான 11 சொத்துகளுக்கான சொத்து வரி பாக்கி, 6 கோடியே 43 லட்சத்து 87 ஆயிரத்து 970 ரூபாயை பிப்ரவரி 6 ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் எனக் கூறி மாநகராட்சி தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
கடந்த 2001-2002 முதல் 2007-2008 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்திற்கு சென்னை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி பாக்கியை செலுத்தக் கூறி அனுப்பப்பட்ட நோட்டீசை எதிர்த்து சென்னை ரேஸ் கிளப் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சி.சரவணன் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சொத்து வரி பாக்கி வசூலிப்பது தொடர்பாக நோட்டீஸ் அனுப்பும் முன், தங்கள் தரப்பு விளக்கத்தையும், ஆட்சேபங்களையும் மாநகராட்சி கேட்கவில்லை என ரேஸ் கிளப் தரப்பில் வாதிடப்பட்டது.
இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி சி. சரவணன், ரேஸ் கிளப்பிடம் சொத்து வரி பாக்கி வசூல் செய்யும் நடவடிக்கைகளை நான்கு வாரங்களுக்கு நிறுத்தி வைக்கும்படி சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டார். மேலும், மனுவுக்கு பதில் அளிக்கும்படி சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை நான்கு வாரங்களுக்கு தள்ளி வைத்துள்ளார்.

