சென்னை அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கை தினந்தோறும் விசாரித்து விரைந்து முடிக்க வேண்டும் என சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2024ஆம் ஆண்டு அண்ணா நகரை சேர்ந்த 10 வயது சிறுமியின் உடலில் இருந்து துர்நாற்றம் வீசியதையடுத்து அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிறுமியை அவளது பெற்றோர் அழைத்து சென்றுள்ளனர். சிறுமியை பரிசோதித்த மருத்துவர், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.
இதனையடுத்து, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமியிடம் மருத்துவமனை வளாகத்தில் வைத்து கீழ்ப்பாக்கம் காவல்துறை ஆய்வாளர் ராஜி விசாரணை மேற்கொண்டார். பின்னர் சிறுமியின் தாயை காவல் நிலையத்திற்கு அழைத்து தாக்குதல் நடத்தியுள்ளார்.
தொடர்ந்து, சிறுமியின் தந்தையை விசாரணைக்கு அழைத்து, சமாதானமும் செய்ய முயற்சி செய்யப்பட்டது. சமாதானத்தை ஏற்க மறுத்ததால் அவரையும் காவல் ஆய்வாளர் தாக்கியுள்ளார். இதனிடையே, பாதிக்கப்பட்ட சிறுமியிடம் பெறப்பட்ட வாக்குமூலம் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக, 2024ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தாமாக முன்வந்து வழக்காக எடுத்த சென்னை உயர்நீதிமன்றம், விசாரணையை சிபிஐ-க்கு மாற்றி உத்தரவிட்டது. சிபிஐ விசாரணையை எதிர்த்து தமிழ்நாடு அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், சிபிஐ விசாரணைக்கு தடை விதித்தது. மேலும் சென்னை காவல் இணை ஆணையர் சரோஜ் குமார் தாக்கூர் தலைமையில், ஆவடி சரக சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் ஐமான் ஜமால், சேலம் மாநகர வடக்குத் துணை ஆணையர் பிருந்தா அடங்கிய சிறப்பு புலனாய்வு குழு அமைத்து உத்தரவிட்டது.
மேலும், இந்த குழு வாரந்தோறும் உயர்நீதிமன்றத்தில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடு வழங்குவது குறித்து உயர்நீதிமன்றம் முடிவெக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதன் பின்னர், பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் இழப்பீடு கேட்டு உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இழப்பீடு மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட 1 லட்சம் ரூபாயுடன், மேலும் 3 லட்சம் ரூபாய் வழங்குமாறு தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.
மேலும், 2024ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்கில் காவல்துறை அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. போக்சோ சட்டத்தை தவறாக பயன்படுத்திய காவல்துறை அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கையை ஏன் எடுக்கவில்லை? என காவல்துறைக்கு கேள்வி எழுப்பிய நீதிபதிகள் தீர்ப்பை ஜனவரி 30ஆம் தேதி ஒத்தி வைத்திருந்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள் பி.வேல்முருகன், எம்.ஜோதிராமன் அமர்வு, சிறுமி பாலியல் வன்கொடுமை செயப்பட்டது தொடர்பான புலன் விசாரணையும், வழக்கு விசாரணையும் போக்சோ சட்ட விதிகளை பின்பற்றி நடத்தப்படுவதை உறுதி வேண்டும் என உத்தரவிட்டது.
மேலும், சிறுமியின் அடையாளத்தை அம்பலப்படுத்திய அதிகாரிகளுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை நியாயமாக, பாரபட்சமற்ற முறையில் விசாரிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் நியமித்த சிறப்பு புலனாய்வு குழுவுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதுமட்டுமின்றி, சிறுமி பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கை தினந்தோறும் விசாரித்து முடிக்க வேண்டும் என சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டுள்ளனர்.
இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 4 லட்சம் ரூபாய் இடைக்கால இழப்பீடு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், இறுதி இழப்பீட்டு தொகையை, வழக்கில் இறுதி தீர்ப்பு அளிக்கும்போது பரிசீலிக்கும்படி, போக்சோ சிறப்பு நீதிமன்றத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
காவல்துறை அதிகாரிகளுக்கு எதிரான துறைரீதியான நடவடிக்கையை சுதந்திரமாக மேற்கொண்டு, விரைந்து முடிவெடுக்க வேண்டும் என, அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், பாதிக்கப்பட்ட சிறுமிக்கும், அவரது குடும்பத்தினருக்கும் போதுமான பாதுகாப்பை வழங்க வேண்டும் எனவும் தங்களது உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

