ஜெயலலிதாவால் மூன்று முறை முதலமைச்சர் பதவியேற்ற ஓபிஎஸ் இன்று எதிரி கட்சியான திமுகவில் இணைந்து மிக பெரிய துரோகம் செய்துவிட்டதாக நடிகை கௌதமி விமர்சித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்திற்கு இன்று வருகை தந்த நடிகையும், அதிமுக நிர்வாகியுமான கௌதமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவரிடம் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரும், ஜெயலலிதாவின் விசுவாசியுமான ஓபிஎஸ் திமுகவில் இணைந்தது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர், ”தூத்துக்குடியில் நடைபெறும் அதிமுக பொதுக்கூட்டத்திற்கு சென்று கொண்டிருக்கிறேன். இது தான் எனக்கு முக்கியமான வேலை. ஓ பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்தது பற்றி எல்லாம் பேச எனக்கு நேரமில்லை.
வாழ்நாள் முழுவதும் இரண்டு மிகப்பெரிய தலைவர்களால் அடையாளம் காட்டப்பட்டவன் நான் என்று இத்தனை ஆண்டுகளாக ஓபிஎஸ் கூறி வந்தார். ஜெயலலிதாவால் மூன்று முறை முதலமைச்சர் பதவியேற்ற ஒருவர் இன்று அதிமுகவிற்கு மட்டுமல்ல, ஜெயலலிதாவிற்கும் துரோகம் செய்து உள்ளார். அதிமுகவின் எதிரி கட்சியாக இருந்து வரும் திமுகவில் போய் சேர்வது துரோகத்தின் உச்சம்.
எனது தாய் வீட்டில் எந்த பிரச்சினைகள் இருந்தாலும் எனது அடையாளம் எனது தாயால் தான் கிடைத்தது என நினைக்க வேண்டும். அப்படி உண்மையான உணர்வு இருப்பவர்கள் குடும்பத்தோடு இருந்து வீட்டில் இருக்கும் பிரச்சினைகளை தீர்த்து வைக்க தான் முயற்சி எடுக்க வேண்டும். ஒரு உண்மையான கட்சிக்காரர்கள் இப்படி தான் நடந்து கொள்வார்கள். தற்போது எடப்பாடி பழனிசாமி அப்படி தான் செயல்பட்டு வருகிறார். ஆனால், ஓபிஎஸ் பேசுவதெல்லாம் ஆணவத்தின் உச்சம்.
அதிமுகவில் உள்ள தலைவர்கள் யாரும் மற்ற கட்சிக்கு செல்லவில்லை. அனைத்து மூத்த தலைவர்கள் அனைவரும் ஒற்றுமையாக தான் இருக்கிறார்கள். அதிமுக பலமாகத்தான் இருக்கிறது. ஓரிருவர் செல்வதால் கட்சி சிதறும் எனக் கூறுவதற்கு வாய்ப்பில்லை. அதிமுக தமிழக மண்ணில் ஆழமாக பதிந்துள்ள கட்சி. திசை திருப்பும் முயற்சி பலிக்காது.
அதிமுகவில் இருந்து தமிழக வெற்றிக் கழகத்திற்கு சென்ற ஒருவர் (செங்கோட்டையன்) மீண்டும் அதிமுகவிற்கு திரும்பி வர உள்ளார் என முன்னாள் அமைச்சர் வேலுமணி சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை.
ஒரு கட்சிக்கு உண்மையானவராக இருந்தால், கட்சியை பலப்படுத்துவதற்கு அனைத்து முயற்சிகளையும் எடுப்பேன் என்றும் கட்சி வளர்ச்சிக்காக தியாகம் செய்யவும் தயாராக இருப்பேன் என்றும் சொல்ல வேண்டும். தற்போது அதிமுகவில் இருப்பவர்கள் அனைவரும் இப்படித்தான் இருக்கிறார்கள்” என கூறினார்.

