நாங்குநேரி அருகே இரு சக்கர வாகனங்களில் வந்த மர்ம கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் சாலையில் தென்பட்டவர்கள் அனைவரையும் சரமாரியாக வெட்டியதில் இருவர் உயிரிழந்தனர். 6 பேர் படுகாயமடைந்தனர்.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியை அடுத்து கடம்போடு வாழ்வு என்ற ஊர் இருக்கிறது. நேற்றிரவு (மார்.2) வழக்கம்போல் அந்த பகுதி இயங்கிக்கொண்டிருந்தது. இரவு 7.30 மணியளவில் 9 பேர் கொண்ட மர்ம கும்பல் இருசக்கர வாகனங்களில் திடீரென அந்த பகுதிக்கு வந்துள்ளனர். அனைவரும் கஞ்சா போதையில் இருந்ததாக தெரிகிறது.
அவர்கள் அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேரை அரிவாளால் வெட்டியதோடு அவர்களுடைய வாகனத்தையும் பறித்துள்ளனர். பின்னர் 3 இருசக்கர வாகனங்களில் சென்ற நாங்குநேரி பெரும்பத்து பகுதியை அடைந்து, அங்கு டீக்கடையின்மீது பெட்ரோல் குண்டை வீசியுள்ளனர்.
டீக்கடையில் இருந்தவர்கள் இதனை சற்றும் எதிர்பாராததால் அங்கிருந்து பதற்றத்தில் அங்குமிங்குமாக ஓடியுள்ளனர். இதனை பார்த்த அந்த ரவுடி கும்பல், தாங்கள் வைத்திருந்த அரிவாள்களால் அனைவரையும் சரமாரியாக வெட்டி தாக்கியுள்ளனர். இதில் மாற்றுத்திறனாளியான ஜான் என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் செங்கல்சூளையில் பணியாற்றி வந்த வடமாநில தொழிலாளி, படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தார். பெரும்பத்து பகுதியைச் சேர்ந்த நெல்சன், பிரபாகரன், ராமசாமி ஆகியோர் அரிவாள் வெட்டால் படுகாயமடைந்தனர்.
அதோடு அந்த கஞ்சா போதை கும்பல் ஓயவில்லை. அந்த பகுதியிலிருந்து அடுத்து அருகிலுள்ள புளியங்குளம் கிராமத்துக்குச் சென்றுள்ளனர். அங்கு சசிகுமார் மற்றும் வீராங்குளத்தை கணேசன் ஆகிய இருவரை வெட்டியதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். இவர்களில் நெல்சன் மற்றும் கணேசன் ஆகிய இருவருக்கும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மற்றவர்கள் நாங்குநேரி மற்றும் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கஞ்சா போதையில் இந்த கொடூர செயலில் ஈடுபட்ட கும்பல் அங்கிருந்து தப்பியோடிய நிலையில் அவர்களை பிடிக்க காவல்துறை சார்பில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் சம்பவ இடத்தில் திருநெல்வேலி சரக டிஐஜி சரவணன், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரசன்ன குமார் உள்ளிட்டோர் விசாரணை நடத்தினர். மோப்பநாய் வரவழைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் கஞ்சா போதையில் இருப்பதாக கூறப்பட்டாலும், ஜாதிய மோதலால் இந்த தாக்குதல் நடந்ததா என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இரட்டை கொலை சம்பவத்தை அடுத்து உயிரிழந்தவர்கள், காயம்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் சமூகத்தினர் நாங்குநேரி பகுதியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் காவல்துறை பேச்சுவார்த்தை நடத்தி குற்றவாளிகள் கைதுசெய்து தக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த நிலையில் அங்கிருந்து கலைந்து சென்றனர். இச்சம்பவத்தையடுத்து நாங்குநேரி சுற்றுவட்டார கிராமங்களில் ஏராளமான போலீசார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

