இந்திய தலைமைத் தேர்தல் ஆணையரின் வருகையை அடுத்து, மார்ச் மாத தொடக்கத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் ஒரிரு மாதங்களில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக அரசியல் கட்சியினர் விருப்பமனு, பரப்புரை, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வரும் நிலையில், மறுபுறம் தேர்தலை சுமுகமாக நடத்த தேர்தல் ஆணையமும் தீவிரம் காட்டி வருகிறது.
ஏற்கெனவே, பீகாரை தொடர்ந்து தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் (எஸ்.ஐ.ஆர்) மேற்கொள்ளப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அந்த வகையில், எஸ்.ஐ.ஆர் பணிகளும் மிகத் தீவிரமாக நடத்தப்பட்டு வாக்காளர் இறுதி பட்டியல் நேற்று முன்தினம் ( பிப்.23) வெளியிடப்பட்டது. அதில் தமிழ்நாட்டில் மொத்தம் 5.67 கோடி வாக்காளர்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
தேர்தல் தொடர்பாக கடந்த 12 மற்றும் 13-ஆம் தேதிகளில் இந்திய தேர்தல் ஆணைய குழுவினர் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் உடன் ஆலோசனை மேற்கொண்டனர்.
இந்நிலையில், இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் இன்று புதுச்சேரிக்கு வருகை தந்துள்ளார். அங்கு அவர், சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார். புதுச்சேரியை தொடர்ந்து, நாளை (பிப்.26) அவர் சென்னைக்கு வருகை தருகிறார்.
நாளை காலை எம்.ஆர். சி நகரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் அவர் ஆலோசனைக் கூட்டம் நடத்த உள்ளார். இதில், பணப்பட்டுவாடாவை தடுத்து, தேர்தலை சுமுகமாக நடத்த அரசியல் கட்சிகளின் ஆலோசனைகளை கேட்க உள்ளார்.
இதையடுத்து, அன்றைய தினம் நண்பகலில் மாவட்ட தேர்தல் அலுவலர்கள், காவல்துறை கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார். அப்போது சட்டம் – ஒழுங்கு பிரச்சனை தொடர்பாகவும், பதற்றமான வாக்குசாவடிகள் குறித்த விவரங்களையும் கேட்டறிகிறார்.
தொடர்ந்து 27 ஆம் தேதி, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், வருமான வரித்துறை, சுங்கத்துறை, காவல்துறை, ரயில்வே, துணை ராணுவம், தபால்துறை, விமான போக்குவரத்துறை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட துறைகளின் ஒருங்கிணைப்பு அலுவலர்களுடனும் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஆலோசனை மேற்கொள்கிறார்.
வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்புகள், கண்காணிப்பு கேமரா பொருத்துவது, வாக்காளர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.
அனைத்து ஆலோசனைக் கூட்டமும் நிறைவடைந்த பிறகு, பிப்ரவரி 27 அன்று நண்பகல் நேரத்தில், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் செய்தியாளர்களை சந்தித்து, தேர்தல் பணிகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விவரிக்க உள்ளதாக தெரிகிறது. இதையடுத்து, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதி மார்ச் மாதம் தொடக்கத்தில் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

