தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் எடப்பாடி பழனிசாமி முக்கிய ஆலோசனை நடத்தினார். டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த அமித் ஷா கூட்டணி குறித்து பேசினார்.
அதிமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு முடிவாகாத நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திடீர் பயணமாக நேற்று டெல்லி சென்றார். இரவு 8.30 மணிக்கு மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேச இருப்பதாகக் கூறப்பட்ட நிலையில், சுமார் இரண்டு மணி நேரம் தாமத்திற்குப் பிறகு அமித் ஷாவின் இல்லத்திற்கு எடப்பாடி பழனிசாமி சென்றார். அங்கு இருவரும் சுமார் ஒரு மணி நேரம் ஆலோசனை மேற்கொண்டனர். பாஜகவுக்கு அதிமுக 29 தொகுதிகள் வரை ஒதுக்க முன்வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
வரும் தேர்தலில் மயிலாப்பூர், தியாகராய நகர், வேளச்சேரி, அவிநாசி, மதுரை தெற்கு, திருப்பரங்குன்றம், திருச்செந்தூர் உள்ளிட்ட தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என பாஜக தரப்பில் வலியுறுத்தப்பட்டதாகத் தெரிகிறது. இந்த தொகுதிகளுக்கு மாற்றான இடங்கள் மற்றும் மத்திய அமைச்சரவையில் அதிமுகவிற்கு இடம் வழங்குவது பற்றி இருவரும் ஆலோசித்ததாகவும் கூறப்படுகிறது.
அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளில் எந்தெந்த கட்சியை தாமரை மற்றும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வைக்கலாம் என்பது குறித்தும் ஆலோசித்ததாகக் கூறப்படுகிறது. அத்துடன் கூட்டணியில் வி.கே. சசிகலா, புதிய தமிழகம் கட்சிகளை கூட்டணியில் இணைப்பது பற்றியும் விவாதித்ததாகத் தெரிகிறது.
பின்னர் விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, “தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை நாளை தொடங்கும். தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தைக்காக நாளை பியூஷ் கோயல் சென்னை வருகிறார். தமிழ்நாட்டில் என்டிஏ கூட்டணிக்கு அதிமுக தான் தலைமை. கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டில் எந்த சிக்கலும் இல்லை. 4 நாட்களில் அனைத்தும் தெரியும். 4 நாட்களில் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை முடிந்து யார் யார் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என அறிவிக்கப்படும். தமிழக வெற்றிக் கழகத்துடன் நாங்களோ அல்லது அவர்கள் எங்களுடனோ கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை. அதிமுகவுடன் சேர வேண்டிய கட்சிகள் சேர்ந்துவிட்டன. இனி புதிய கட்சிகள் சேர வாய்ப்பில்லை” என்று தெரிவித்தார்.

