மக்களிடம் இருந்து அரசாங்கம் விலகிச் சென்றால், அவர்களின் கடுங்கோபத்தை சந்திக்க நேரிடும் என்று நேபாள புரட்சியை சுட்டிக்காட்டி RSS தலைவர் மோகன் பகவத் தெரிவித்தார். மேலும், நேபாளம் உள்ளிட்ட அண்டை நாடுகளில் நடக்கும் புரட்சிகள், இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.
RSS இயக்கத்தின் 100-ஆவது ஆண்டு விழா, அதன் தலைமையகமான நாக்பூரில் இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, விஜயதசமி சிறப்பு பேரணியும் நடைபெற்றது.
இந்நிகழ்வில் RSS இயக்கத்தின் தலைவர் மோகன் பகவத் கூறுகையில், பெஹல்காம் தாக்குதலில் 26 பேரின் உயிர்களை நாம் இழந்தோம். அந்த சமயத்தில்தான் எந்தெந்த நாடுகள் நம் பக்கம் உறுதுணையாக, நண்பர்களாக இருந்தன என்பதை பார்க்க முடிந்தது.
இந்திய அரசு மற்றும் நம் ராணுவத்தின் அசாத்திய செயல்பாடுகளின் விளைவே ‘ஆபரேஷன் சிந்தூர்’. பயங்கரவாதிகளை ஆட்டம் காண வைத்த ஆபரேஷன் சிந்தூர், இந்தியாவின் தலைமைத்துவத்தை பறைசாற்றும் விதமாக அமைந்திருந்தது.
எந்த ஒரு விஷயத்திற்கும் வன்முறை தீர்வாகாது. அது நாட்டின் வளர்ச்சியையும், அமைதியையும் கெடுத்து, வளர்ச்சியை பின்னோக்கி எடுத்துச் செல்லும். எனவே, பயங்கரவாதிகளை வளர விடக்கூடாது; அனைத்து நாடுகளும் கூட்டாக சேர்ந்து அவர்களை அழிக்கும் முயற்சிகளை எடுக்க வேண்டும்.
அமெரிக்கா அதன் நாட்டு மக்களின் நலன் கருதி, வரிகளை விதித்து வருகிறது. ஆனால், அது பிற நாடுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதுதான் சரியான தருணம். தற்சார்பு நிலைக்கு இந்தியாவை கொண்டு செல்லும் நேரம் வந்துவிட்டது.
எனினும், பிற நாடுகளுடன் நாம் நட்புறவில் வர்த்தகத்தை மேற்கொள்ள வேண்டும். என்றென்றும் ஒரு நாட்டின் நெருக்கடிக்கு அடிபணிந்து, நாம் வர்த்தக ஒப்பந்தங்களில் ஈடுபடக்கூடாது. தற்போதைய பாஜக அரசு அதற்கு முன்னுதாரணாக திகழ்கிறது.
நேபாளம் உள்ளிட்ட அண்டை நாடுகளின் விவகாரங்களை உற்று கவனிக்க வேண்டும். அவற்றை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது.
அண்டை நாடுகளில் நிலவும் உள்நாட்டு புரட்சிகள் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தலாம். எனவே, அரசு அதில் கவனமாக இருக்க வேண்டும்.
மக்களிடம் இருந்து அரசாங்கம் விலகிச் சென்றால் அவர்களின் கடுங்கோபத்தை சந்திக்க நேரிடும்” என எச்சரிக்கும் தொனியில் பேசினார்.