‘ஓராண்டு காலமாக 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் உள்ளாட்சிகளுக்கான உரிமையை பறித்த முதல்வர் ஸ்டாலின் இன்று மாநில சுயாட்சியை பற்றி பேசுகிறார்’ என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘ஓராண்டு காலமாக 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் உள்ளாட்சிகளுக்கான உரிமையை பறித்து மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாமல் அதிகாரிகளை வைத்து நிர்வாகம் செய்து கொண்டிருக்கும் முதல்வர் ஸ்டாலின் இன்று மாநில சுயாட்சியை பற்றி பேசுகிறார்.
தான் ஆளும் தமிழ்நாட்டில் மாநிலத்துக்கு உள்ளாக உள்ள முறையான அதிகார பகிர்வை, அதாவது உள்ளாட்சிகளுக்கு உரிமை கொடுக்க முடியாதவர், எல்லா மாநிலங்களுக்கும் சமமாக தனது நிர்வாகத்தை எந்த பாராபட்சமும் இல்லாமல் நடத்திக் கொண்டிருக்கும் மத்திய அரசை பார்த்து குறை கூறிக் கொண்டிருக்கிறார்.
தேர்தலில் வளர்ச்சியை சொல்லி வாக்கு கேட்க முடியாத திராவிட முன்னேற்ற கழகம், மாநில சுயாட்சி என்று முதலில் கோரிக்கை வைத்து பின்பு தாங்கள் மத்தியில் ஆட்சியில் வரும்பொழுது அதை எல்லாம் மறந்து, இன்று மறுபடியும் தோல்வி பயம் வரும் பொழுது இதைப் போன்ற கோரிக்கைகளை கையில் எடுக்கிறார்கள். திமுகவின் தோல்வி பயத்தையே இது காண்பிக்கிறது’ என்று தமிழிசை குறிப்பிட்டுள்ளார்.

