தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர்களை அறிவித்துள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக, பாமக, அமமுக, தமாகா என மொத்தம் 61 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள தொகுதிகளில், சில கட்சிகளுக்கு ஒதுக்கியது போக சுமார் 170 இடங்களில் அதிமுக ‘இரட்டை இலை’ சின்னத்தில் நேரடியாக போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. தமாகா போன்ற சிறிய கூட்டணிக் கட்சிகளும் இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிட வாய்ப்புள்ளது.
இந்நிலையில், அதிமுகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 23 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார்.
அதன்படி, வழக்கம் போல் எடப்பாடி தொகுதியில் மீண்டும் இபிஎஸ் போட்டியிடுகிறார். வேப்பனஹள்ளி தொகுதியில் அதிமுக துணைப் பொதுச் செயலாளர் கேபி முனுசாமியும், கோவை தொண்டாமுத்தூரில் எஸ்பி வேலுமணி, சென்னை ராயபுரம் தொகுதியில் ஜெயக்குமார் போட்டியிடுகின்றனர்.
மதுரை மேற்கு தொகுதியில் செல்லூர் ராஜு, மயிலம் தொகுதியில் சிவி சண்முகம், பாலக்கோடு தொகுதியில் கேபி அன்பழகன், நன்னிலம் தொகுதியில் காமராஜ், குமாரபாளையம் தொகுதியில் தங்கமணி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நத்தம் தொகுதியில் விஸ்வநாதன், வேதாரண்யம் தொகுதியில் ஓ.எஸ்.மணியன், விராலிமலை தொகுதியில் விஜயபாஸ்கர் போட்டியிடுகின்றனர். திண்டுக்கல் தொகுதியில் திண்டுக்கல் சீனிவாசன், கோவில்பட்டி தொகுதியில் கடம்பூர் ராஜு, திருமங்கலம் தொகுதியில் ஆர்பி உதயகுமார், சிவகாசி தொகுதியில் கே.டி.ராஜேந்திரபாலாஜி ஆகியோர் போட்டியிடுவதாக கூறப்பட்டுள்ளது.
மதுரவாயல் தொகுதியில் பெஞ்சமின், கலசப்பாக்கம் தொகுதியில் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, திருப்பரங்குன்றம் தொகுதியில் ராஜன் செல்லப்பா, பவானி தொகுதியில் கேசி கருப்பணன், ஜோலார்பேட்டை தொகுதியில் கேசி வீரமணி, கரூர் தொகுதியில் எம்ஆர் விஜயபாஸ்கர், அரியலூர் தொகுதியில் தாமரை எஸ்.ராஜேந்திரன் ஆகியோர் போட்டியிடுவதாக கூறப்பட்டுள்ளது.
23 தொகுதியில் 21 முன்னாள் அமைச்சர்கள் போட்டியிடுகின்றனர். தற்போது எம்எல்ஏவாக உள்ள 16 பேருக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. பாஜக வசம் செல்லும் என எதிர்பார்க்கப்பட்ட திருப்பரங்குன்றம் தொகுதியில் மீண்டும் அதிமுக போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. முன்னாள் அமைச்சர்கள் இல்லாத ராஜன் செல்லப்பா மற்றும் தாமரை ராஜேந்திரன் பெயர்களும் முதல்கட்ட பட்டியலில் இடம்பெற்றுள்ளன. தற்போது ராஜ்ய சபா எம்பியாக உள்ள சிவி சண்முகத்திற்கு மயிலம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

