’அசுரன்’ திரைப்படத்தில் எனது மகன் கதாபாத்திரத்திற்கு கென் கருணாஸை வேண்டாம் என முதலில் நிராகரித்தேன் என நடிகர் தனுஷ் கூறியுள்ளார்.
கென் கருணாஸ் இயக்கிய நடித்துள்ள திரைப்படமான ’யூத்’ வரும் 19-ம் தேதி வெளியாக உள்ள நிலையில், அதன் முன்னோட்ட நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக நடிகர் தனுஷ் மற்றும் இயக்குநர் வெற்றிமாறன் ஆகியோருடன் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
இதில் நடிகர் கருணாஸ் பேசுகையில், ”என் மகன் கென்னை நடிகனாக அறிமுகப்படுத்திய வெற்றிமாறனுக்கும், சினிமாவை கற்றுத் தந்த நடிகர் தனுஷுக்கும் நன்றி. தனுஷின் தொடக்க காலத்தில் பல அவமானங்களை சந்தித்தார். சினிமாவுக்கு உண்மையாக இருந்தால் சினிமா ஒருபோதும் கைவிடாது. ’கர’ படத்தில் தனுஷுடன் இணைந்து நடித்துள்ளேன். அந்த படத்தில் அவருக்கு விருது கொடுத்தால், எனக்கும் விருது கொடுக்க வேண்டும். இல்லை என்றால் மத்திய அரசு மீது கோபமாகி விடுவேன்.
வெற்றிமாறனின் முதல் திரைப்படம் ’பொல்லாதவன்’. அந்த திரைப்படத்தில் இருந்து வெற்றிமாறனுடன் பயணித்துக் கொண்டிருக்கிறேன். பொல்லாதவனுக்கு பிறகு வெற்றிமாறன் என்னை படத்தில் நடிக்க அழைக்கவில்லை. தனுஷ் அடையாளம் காண்பித்த யாரும் சினிமாவில் தோற்றதாக சரித்திரம் இல்லை. ’யூத்’ படம் வெற்றிப் பெற வாழ்த்துகள்” என்றார்.

இயக்குநர் வெற்றிமாறன் பேசுகையில், ”கென் கதை கூறிய போது 2-ம் பாதி நீளமாக இருப்பதாக கூறினேன். விமர்சனத்தில் நான் மிகவும் கறாராக இருப்பேன். ஆனால், கென் கதை கூறிய போது இருந்த எனர்ஜி மிகவும் நன்றாக இருந்தது. அனைத்து படங்களுக்கும் இளைஞர் பட்டாளம் அமையாது. இந்த படத்தில் நிறைய பாசிடிவ் எனர்ஜி உள்ளது, படக்குழுவினருக்கு வாழ்த்துகள்” என்றார்.
நடிகர் தனுஷ் பேசுகையில், ”இந்த படம் வெற்றியடைந்தால் அதன் முதல் சொந்தக்காரர், தயாரிப்பாளர் கருப்பையா தான். ஒரு குழந்தையை எப்படி வளர்க்க வேண்டும் என்பதை கருணாஸ், கிரேஸுடம் கற்க வேண்டும். கென்னை அருமையாக வளர்த்துள்ளனர். என் தந்தைக்கு தோள் கொடுக்கிறேன் என எப்போது ஒரு மகன் களமிறங்குகிறானோ அப்போது அவன் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. நட்பை வார்த்தையாக வைக்காமல் செயலில் காண்பித்திருக்கிறார் ஜி.வி பிரகாஷ். இந்த படத்தை சம்பளம் பெறாமல் இசையமைத்துள்ளார்.
’அசுரன்’ படப்பிடிப்புக்கு நடைபெற்ற போட்டோ ஷூட்டில் முதன்முறையாக கென்னை பார்த்தேன். என் மகன் கதாபாத்திரத்துக்கு கென் வேண்டாம் என நிராகரித்தேன். பிறகு தான் அவரின் திறமை புரிந்தது. அதன்பின் இருவரும் நன்றாக இருவரும் புரிந்து கொண்டோம். படம் இயக்கப் போகிறேன் என முதலில் கென் என்னிடம் சொன்ன போது அதிர்ச்சியாக இருந்தது.
முதலில் வேண்டாம் என்றேன், அதற்கு நம்பிக்கையுடன் முடியும் என கென் கூறினார். அந்த வார்த்தையை கென் நிரூபித்துவிட்டார். இப்போது இருக்கும் இளைஞர்கள் 25 வயதுக்குள் நிறைய விஷயங்களை செய்து விடுகிறார்கள். அதிக காலம் காத்திருக்க தேவையில்லை என்பதை இளைய தலைமுறையினரிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும்” என பாராட்டினார்.

