யாசகம் கேட்டு வந்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இளைஞர், அவரை அடித்து கொலை செய்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை முகப்பேர் கிழக்கு சர்ச் தெருவில் செயல்படும் தனியார் பேக்கரி அருகே உள்ள இடத்தில் பெண் சடலத்துடன் இளைஞர் ஒருவர் படுத்திருப்பதாக ஜெ.ஜெ. நகர் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் விரைந்து சென்ற போலீசார், இளைஞரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அந்த விசாரணையில் திடுக்கிடும் பல உண்மைகள் வெளிவந்துள்ளது. அதாவது, கைது செய்யப்பட்ட இளைஞர் மதுரையை சேர்ந்த ஷேக் (26) என்றதும், அவர் சென்னையில் பிளம்பர் தொழில் செய்து வருவதும் தெரியவந்தது. இந்த நிலையில், நேற்று (பிப்.23) இரவு மது போதையில் வந்த ஷேக்கிடம், 54 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் யாசகம் கேட்டுள்ளார்.
அப்போது, யாசகம் கேட்ட பெண்ணை ஷேக் பாலியல் உறவுக்கு அழைத்துள்ளார். ஆனால், அந்த பெண் மறுப்பு தெரிவித்த நிலையில், அவரை ஆளில்லாத இருட்டுப் பகுதிக்கு இழுத்து சென்ற இளைஞர் கடுமையாக தாக்கியுள்ளார். அதில் படுகாயம் அடைந்த அப்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிகிறது. அதனை அறியாத அந்த இளைஞர் மது போதையில் சடலத்துடன் உறவு கொண்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதன் பிறகும், அப்பெண் இறந்து விட்டது தெரியாத இளைஞர், போதையில் சடலத்தின் அருகே படுத்து உறங்கியுள்ளார். இன்று (பிப்.24) காலையில் அதனைக்கண்ட பொதுமக்கள் உடனடியாக காவல் துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். தொடர்ந்து, அப்பெண்ணின் சடலத்தை மீட்ட போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், இந்த சம்பவம் தொடர்பாக இளைஞரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். யாசகம் பெற்று வாழ்ந்து வந்த 54 வயது பெண்ணை, மது போதையில் இளைஞர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

