தனுஷ், வெற்றிமாறன் ஆகியோர் ‘லீடர்’ படத்தை பார்த்துவிட்டு பிரமாதமாக உள்ளது என பாராட்டியதாக லெஜண்ட் சரவணன் பெருமிதத்துடன் கூறினார்.
துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன், லால், ஆண்ட்ரியா, ஷாம், ஐஸ்வர்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘லீடர்’ திரைப்படம் வரும் ஏப்ரல் 9ஆம் தேதி திரைக்கு வருகிறது. இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்நிலையில், ’லீடர்’ (Leader) படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இவ்விழாவில் திரைப்படத்தில் பணியாற்றியவர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர்கள் ஆர்.கே.செல்வமணி, பாக்யராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் நடிகை ஐஸ்வர்யா பேசுகையில், “லெஜண்ட் சரவணன் சிறந்த மனிதர், உண்மையை சொல்லப் போனால் எனக்கு திரைப்படம் இல்லாத நிலையில், இந்த படம் நடிக்க வாய்ப்பு வந்தது. அவர் எனக்கு பணம் கொடுத்து என்னை ஜெய்ப்பூர் சுற்றி பார்க்க வைத்தார் என்றுதான் சொல்ல வேண்டும். படக்குழு என்னை ராணி போல பார்த்து கொண்டார்கள். லெஜண்ட் சரவணன் வாழ்வில் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி அடைய வேண்டும்” என கூறினார்.
தொடர்ந்து, இயக்குநர் ஆர்.கே.செல்வமணி பேசுகையில், “துரை செந்தில்குமார் இந்த படம் பண்ணும் போது, சரவணன் ஒரு தங்க முட்டை இடும் வாத்து. இன்று நமது சினிமாத்துறையை காக்க அவரை போன்ற தயாரிப்பாளர் தேவைப்படுகின்றனர். நீ நல்ல படமாக எடுக்க வேண்டும் என கூறினேன். லெஜண்டை பாக்கும்போது பொறாமையா இருக்கும். இந்த பக்கம் தமன்னா, இன்னொரு பக்கம் மற்றொரு நடிகை. ஆனால் இந்த படத்தோட டீசர் பார்க்கும்போது பாராட்டினேன்” என்றார்.
பின்னர் இயக்குநர் துரை செந்தில்குமார் பேசுகையில், ”படப்பிடிப்பு தளத்தில் கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக கதாநாயகன் லெஜெண்ட் சரவணனுடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. குன்னூரில் ஒரு காட்சி எடுக்கும் செல்லும் வழியினை நான் மறந்துவிட்டேன். அப்போது என்ன செய்வது என தெரியாமல் இருக்கும் போது, ”லெஜெண்ட் சரவணன் வருக, வருக” என அவரது ரசிகர்கள் வைத்திருந்த பேனரை பின்தொடர்ந்து படப்பிடிப்பு தளத்திற்கு சென்றோம்.
தமிழ்நாட்டில் மட்டும்தான் இப்படி என்று பார்த்தால், ஜெய்ப்பூரிலும் படப்பிடிப்பிற்கு செல்ல வேண்டிய இடத்தை நான் மறந்துவிட்டேன். அப்போது ஜெய்ப்பூரிலும் ”லெஜெண்ட் சரவணன் வருக, வருக” என அவரது ரசிகர்கள் வைத்திருந்த பேனரைப் பின்தொடர்ந்து படப்பிடிப்பு தளத்திற்கு சென்றோம். இது எங்களுக்கு நெகிழ்ச்சியாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது.
இதனைத்தொடர்ந்து படத்தின் கதாநாயகன் நடிகர் லெஜெண்ட் சரவணன் பேசுகையில், “லீடர் படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியா, ஜெய்ப்பூர், ஊட்டி, தூத்துக்குடி, சென்னை உள்ளிட்ட பல இடங்களிலும் நடைபெற்றது. கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியில் பத்தாவது நாள் எனது காலில் அடிபட்டது. அடுத்த நாள் ஷூட்டிங்கிற்கு காயத்துடன் நடந்து வந்தேன். ஆனால் ‘கேமரா, ரோல், ஆக்சன்’ சொன்னால் அடுத்த நிமிஷமே ஃபயர் தான்.
இயக்குநர் கூறியது போல் எனக்கு எனர்ஜி எங்கிருந்து வருகிறது என்றே தெரியாது. இந்த படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளனர். மலையாளத்தில் மோகன்லாலுக்கு பிறகு மிகப்பெரிய நடிகராக இருக்கக்கூடிய நடிகர் லாலுடன் இப்படத்தில் நடித்துள்ளேன். அவருடன் நடித்த காட்சிகள் அனைத்தும் சிறப்பாக வந்துள்ளது.
மேலும், இப்படத்தில் எனது நடிப்பு தனித்துவமாக உள்ளது. படம் பார்த்தால் அது நிச்சயம் அனைவருக்கும் தெரியவரும். இந்த படத்தை சமீபத்தில் தனுஷ், வெற்றிமாறன் ஆகியோர் பார்த்துவிட்டு பிரமாதமாக உள்ளது என பாராட்டினர். இந்த படம் ஜெயிலர், லியோ, விக்ரம் அளவுக்கு வெற்றிப் படமாக அமையும். அதற்கான அனைத்து தகுதிகளும் இந்த படத்திற்கு உள்ளது” என கூறினார்.

