சிஎஸ்கே அணியில் எம்.எஸ்.தோனி 8 அல்லது 9ஆவது இடத்தில் பேட்டிங் செய்வது அர்த்தமற்றது என்று தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் ஏ.பி.டி வில்லியர்ஸ் கூறியுள்ளார்.
ஐபிஎல் என்றழைக்கப்படும் இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 19ஆவது சீசன் இந்த மாதம் தொடங்குகிறது. இத்தொடரின் முதல் போட்டி மார்ச் 28ஆம் தேதி பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கும் நிலையில், நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து முன்னாள் சாம்பியன்களான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
இதன் காரணமாக அனைத்து ஐபிஎல் அணிகளும் தங்களின் பயிற்சிகளை தீவிரப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், எதிர்வரும் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரருமான மகேந்திர சிங் தோனியின் பேட்டிங் ஆர்டர் குறித்து தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் ஏ.பி.டி வில்லியர்ஸ் கூறிய கருத்துகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
கிரிக்கெட் தொடர்பான பாட்காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஏபிடி வில்லியர்ஸ், “சிஎஸ்கே அணியில் கேப்டன்சி இல்லாமல், எம்.எஸ். தோனி 8 அல்லது 9ஆவது இடத்தில் பேட்டிங் செய்வதில் எந்த அர்த்தமும் இல்லை. அவர் முன்னதாகவே களத்திற்கு வர வேண்டும். அவர் குறைந்தபட்சம் 6ஆவது இடத்திலாவது பேட்டிங் செய்ய வேண்டும். தனிப்பட்ட முறையில், அவர் 4 அல்லது 5ஆவது இடத்தில் பேட்டிங் செய்வதைக் காண நான் விரும்புகிறேன்” என்றார்.
ஏனெனில் ஐந்து முறை சாம்பியனான சிஎஸ்கே அணி, கடந்த சீசனில் மிகவும் மோசமாக செயல்பட்டது. அவர்கள் விளையாடிய 14 போட்டிகளில் 4-இல் மட்டுமே வெற்றி பெற்றது. அணியின் தொடர் தோல்விகளால் ரசிகர்கள் தோனி மீது தங்கள் கோபத்தையும் கொட்டித் தீர்த்தனர். இதற்குக் காரணம், இந்தத் தொடரில் தோனி 7ஆவது அல்லது அதற்கும் குறைவான வரிசையில் பேட்டிங் செய்ய வந்ததே ஆகும்.
இதனால், ரசிகர்கள் உள்பட பல கிரிக்கெட் வீரர்களும் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினர். இதனால் அப்போதே தோனி, 5ஆவது அல்லது 6ஆவது வரிசையில் பேட்டிங் செய்தால் அணிக்கு உதவியாக இருக்கும் என்றும் விமர்சனங்கள் எழுந்தன. அதனை மையப்படுத்தியே தற்போது ஏபிடி வில்லியர்ஸ் இந்த கருத்தை பதிவு செய்துள்ளார். இது சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக மாறி வருகிறது.
இதற்கிடையில், சிறந்த டி20 கிரிக்கெட் வீரர் யார்? என்பதற்கான பதிலையும் ஏபிடி வில்லியர்ஸ் அந்த பாட்காஸ்டில் கொடுத்திருந்தார். அதிலும் குறிப்பாக அவர் வெஸ்ட் இண்டீஸின் முன்னாள் ஜாம்பவான் கிறிஸ் கெயில் அல்லது இந்திய அணியின் பேட்டிங் ஜாம்பவான் விராட் கோலியைத் தேர்ந்தெடுப்பதற்குப் பதிலாக, அவர் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவை சிறந்த டி20 கிரிக்கெட் வீரராகத் தேர்ந்தெடுத்தார்.
இதுகுறித்து பேசிய டி வில்லியர்ஸ்,”எனது கருத்துப்படி, சிறந்த டி20 கிரிக்கெட் வீரர் ஜஸ்பிரித் பும்ரா தான். இதற்குக் காரணம் அவரது நிலையான ஆட்டமே. மேலும், பும்ரா டி20 கிரிக்கெட்டில் எந்த நிலையிலும் பந்துவீசவும், விக்கெட்டுகளை வீழ்த்தவும் தயாராக இருக்கக்கூடிய ஒரு வீரர். குறிப்பாக அது புதிய பந்தாக இருந்தாலும் சரி, பழைய பந்தாக இருந்தாலும் சரி அவர் அதனை சிறப்பாக கையாண்டு வருகிறார்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “போட்டி இக்கட்டான நிலையில் இருந்தாலும், சூப்பர் ஓவருக்கு சென்றாலும் கூட அவரிடம் பந்தை கொடுத்தால் நிச்சயம் போட்டியை வென்றும் கொடுக்கும் திறமை அவரிடம் உள்ளது. பும்ராவின் பந்துவீச்சு பாணி அபாரமானது. அவர் பந்துவீசும் விதம், பேட்ஸ்மேன்களைத் தங்களது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த விடாது” என்றும் பாராட்டியுள்ளார்.

