ஈரானில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் உச்ச தலைவர் மொஜ்தபா காமேனியின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதான்யாகு தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா – இஸ்ரேல் ஆகிய நாடுகள் இணைந்து கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி ஈரான் மீது தாக்குதலை தொடங்கியது. ‘லயன்ஸ் ரோர்’ என்ற பெயரில் ஆபரேஷனை தொடங்கிய இஸ்ரேலுடன், அமெரிக்காவும் இணைந்து கொண்டது. ஈரானின் அணுசக்தி உற்பத்தி தடுப்பது, ஏவுகணைகளை ஒழிப்பது போன்றவற்றை நோக்கமாக கொண்டு தாக்குதல் நடத்துவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
முதல் நாள் தாக்குதலிலேயே ஈரானின் உச்ச தலைவர் அயோதுல்லா காமேனி கொல்லப்பட்டார். இதனைத்தொடர்ந்து, போர் தீவிரமடைந்த நிலையில், 10 நாட்களுக்கும் மேலாக மாறி மாறி தொடர் தாக்குதல்கள் நடத்தி வருகின்றன. குறிப்பாக, மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்காவின் தூதரகங்கள் மற்றும் ராணுவ தளங்களை ஈரான் குறிவைத்து ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
அதேபோல், இஸ்ரேலும் ஈரானுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிற ஹிஸ்புல்லா அமைப்புகள் செயல்படும் லெபனான் நாட்டின் மீது தாக்குதல் நடத்துவதோடு, ஈரான் மீதும் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனிடையே, காமேனியின் மறைவுக்கு பிறகு ஈரானின் புதிய உச்ச தலைவராக அவருடைய மகன் மொஜ்தபா காமேனி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மொஜ்தபா பதவியேற்ற பிறகு, தாக்குதலை தீவிரப்படுத்தி இருக்கிறது ஈரான்.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதான்யாகு, எதிர்பார்த்ததைவிட போர் சிறப்பாகவும், வலிமையானதாகவும் நடந்து வருகிறது எனவும், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா காமேனிக்கு உயிருக்கு உத்தரவாதம் இல்லை எனவும் கூறியுள்ளார்.
அவரிடம், அடுத்து ஹிஸ்புல்லா தலைவர் நயின் காசெம் குறிவைக்கப்படுவாரா? என செய்தியாளர்கள் கேட்டதற்கு, “பயங்கரவாத அமைப்பின் தலைவர்கள் எவருக்கும் நான் ஆயுள் காப்பீட்டை வழங்க மாட்டேன். அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து ஈரானில் கொடுங்கோல் ஆட்சியை அகற்றுவதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. அதற்காக, அங்கு கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகிறோம். இதை இன்னும் தீவிரப்படுத்தவுள்ளோம்.
ஈரான் மக்கள் சுதந்திர பாதையில் செல்லக்கூடிய தருணம் நெருங்கி வருகிறது. அதற்காக, நாங்கள் அவர்களுடன் நின்று அவர்களுக்கு உதவுகிறோம். ஆனால் இறுதியில் இந்த சுதந்திரம் ஈரான் மக்களின் கைகளில் இருக்கிறது” என்றார்.
ஈரானில் ஆட்சி மாற்றத்திற்கு இஸ்ரேல் அழுத்தம் கொடுக்குமா? என்று செய்தியாளர் கேட்டதற்கு, “நீங்கள் ஒருவரை தண்ணீர் குடிக்க அழைத்துச் செல்லலாம். ஆனால் அவரை குடிக்க வைக்க முடியாது. ஆனால் அதை செய்வதற்கு ஏற்ற சூழ்நிலைகளை மக்களுக்கு நாங்கள் உருவாக்கி கொடுப்போம். அவர்கள் வீதிகளில் இறங்கி வர உதவுவோம்.
எப்படியாயினும், ஈரான் இனிமேல் பழைய ஈரானாக இருக்காது. மத்திய கிழக்கும் முன்பு போல் இராது. இஸ்ரேலும் இனிமேல் அதே இஸ்ரேலாக இருக்காது” என்று பதிலளித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புடனான உறவு குறித்து பெருமிதம் தெரிவித்தார். அவர், “அமெரிக்காவுடன் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரு புதுக் கூட்டணியை அமைத்திருக்கிறோம். என்னுடைய சிறந்த, தனிப்பட்ட நண்பரான டிரம்புடனும் தினமும் பேசி வருகிறேன். எங்களுடைய கருத்துகளையும், ஆலோசனைகளையும் சுதந்திரமாக பகிர்ந்துகொண்டு, ஒன்றாக இணைந்து முடிவெடுக்கிறோம்” என்றார்.

