தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதை கண்டித்து, தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் வரும் 15-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது-
திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து, பெண்களுக்கு எதிரான வன்முறை குற்றங்கள் அதிகரித்து, நாடெங்கும் தலைவிரித்தாடுகிறது. இத்தகைய குற்றங்களை தடுத்து, பெண்களை பாதுகாக்கத் தவறிய திமுக அரசை கண்டிக்கும் வகையில், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் வரும் மார்ச் 15-ந் தேதி, மாலை 4 மணியளவில் “பெண்களுக்கு எதிரான வன்முறை குற்றங்களை கண்டிக்கும் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்” மாவட்டம்தோறும் நடத்திட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதில் பாஜகவினர் திரளாக கலந்து கொள்ள வேண்டும். மேலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கிறேன்.
இவ்வாறு அதில் நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

