பாஜகவினர் மீது தொடர்ந்து அடக்குமுறையை ஏவும் பாசிச மாடல் அரசு ஒழிய வேண்டும் என்று தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவு வருமாறு:
கோவை மாவட்டத்திலுள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் உருவப்படத்தையும், பசியற்ற பாரதத்தை உருவாக்கும் நோக்கில் நமது மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட “அன்னயோஜனா” திட்டம் குறித்த தகவல் பலகையையும் வைக்கக் கோரி, உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட முயன்ற கோவை மாநகர் – பாஜக மத்திய அரசு நலத்திட்ட பிரிவு நிர்வாகிகளை திமுக அரசு வலுக்கட்டாயமாக கைது செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
இப்போராட்டத்திற்கு முறைப்படி விண்ணப்பித்து, அதிகாரிகளிடம் அனுமதி வாங்கியதாக கூறப்படும் நிலையில், மாலையில் சரியென்று தலையை ஆட்டிய காவல்துறை காலையில் ஓடிவந்து பாஜகவினரை கைது செய்து சிறையில் தள்ள முயற்சிப்பதன் பின்னணி என்ன? இதே கோவையில் ஏழை மக்களுக்காக ஒதுக்கப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தை தனது சொந்த வீடாகவே மாற்றி வசித்து வரும் திமுக நிர்வாகியை கண்காணிக்காமல் கோட்டை விட்ட காவல்துறை, பாஜக தொண்டர்களின் நிழல் நிலத்தில் பட்டாலே கைவிலங்குடன் துரத்துவது ஏன்?
பாஜகவினரின் போராட்ட முகம் முதல்வர் ஸ்டாலின் அவர்களையும், அவரது கட்டுப்பாட்டில் கைகட்டி நிற்கும் காவல்துறையையும் அந்தளவிற்கு பயமுறுத்துகிறதா?
இவ்வாறு நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

