ஜெய்பீம் படம் பார்த்து உள்ளம் உருகிய முதல்வர் ஸ்டாலினுக்கு தம்முடைய ஆட்சியில், தாம் நேரடியாக நிர்வகிக்கும் துறையின்கீழ் நடைபெறும் படுகொலைகள் உள்ளத்தை உலுக்கவில்லையா? என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் காவல்துறையால் பிடிக்கப்பட்டு விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்ட இளைஞர் ஆகாஷ் டெலிசன் மரணமடைந்திருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. சட்டம் – ஒழுங்கை சீர்படுத்துவதில் ஆர்வம் காட்டாத காவல்துறை, விசாரணை என்ற பெயரில் அப்பாவி மக்களை அடித்துக்கொல்வதில் காட்டுவது கொடுமையாகும்.
திமுக ஆட்சிப்பொறுப்பேற்ற கடந்த 5 ஆண்டுகளில் 40-க்கும் மேற்பட்ட மரணங்கள் காவல்துறை விசாரணையின்போது நடைபெற்றதாக தெரியவருகிறது. ஜெய்பீம் படம் பார்த்து உள்ளம் உருகிய முதல்வர் ஸ்டாலினுக்கு தம்முடைய ஆட்சியில், தாம் நேரடியாக நிர்வகிக்கும் துறையின்கீழ் நடைபெறும் படுகொலைகள் உள்ளத்தை உலுக்கவில்லையா?
இளைஞர் ஆகாஷ் டெலிசனின் மரணத்துக்கு காரணமான காவலர்கள் மீது கொலை வழக்கு பதிந்து உரிய விசாரணை நடத்த வேண்டும்.
இவ்வாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

