மாம்பழ சின்னம் தங்கள் தரப்புக்கு வழங்கக் கோரி பாமக நிறுவனர் ராமதாஸ் தொடர்ந்த வழக்கை நிராகரிக்கக் கோரி அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன், சார்பில் தாக்கல் செய்யப்பட்ட இடையீட்டு மனுக்களுக்கு பதிலளித்த சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாமக சின்னம், கொடி மற்றும் கட்சிப் பெயரை அன்புமணி பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும் என அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தொடர்ந்த வழக்கு சென்னை உரிமையியல் 13- வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி தர்மதுரை முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பாமக பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன் தரப்பில் இடையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில், “தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்ட கட்சி விதிகளின்படி பாமக நிறுவனருக்கு எந்த அதிகாரமும் இல்லை. வயது 87 மற்றும் மருத்துவக் காரணங்களால் எந்த முடிவையும் ராமதாஸால் சுயமாக எடுக்க முடிவதில்லை. சிலர் ஒன்றாகச் சேர்ந்து அவரை தவறாக வழி நடத்தி கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்.
2022- ஆம் ஆண்டு முதல் கட்சியின் பொதுச் செயலாளராக உள்ளேன். புதிதாக கட்சி நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டதை மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 29A(9) படி தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டது. அன்புமணி தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னரும் ராமதாஸ் தி.நகரில் உள்ள அலுவலகத்துக்கு பலமுறை வந்துள்ளார். சட்டமன்றத் தேர்தலில் கட்சியின் வளர்ச்சியை சிதைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. மூன்று முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சராகவும் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்திய அன்புமணியின் வளர்ச்சியைப் பிடிக்காத சிலர் அவருக்கு எதிராக செயல்படுகின்றனர்.
நிறுவனர் ராமதாஸுக்கு நிர்வாகிகளை நியமிப்பது, நீக்குவது, ஒழுங்கு நடவடிக்கை மற்றும் நிர்வாக அதிகாரம் உள்ளிட்ட அதிகாரங்கள் இல்லை என கட்சி விதி 13-ல் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அனைத்து முடிவுகளையும் எடுக்க பொதுக்குழுவுக்கு மட்டுமே உச்ச அதிகாரம் உள்ளது என்றும் கட்சி விதி சொல்கிறது. விதிகளின் படி நிறுவனர் கட்சியின் எந்த பதவியையும் வகிக்க முடியாது. ஆலோசனைகளை மட்டுமே அவர் நிர்வாகிகளுக்கு வழங்க முடியும். அதிகாரம் இல்லாத நிறுவனரின் பெயரால் சட்டவிரோதமாக இந்த மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
போலி ஆவணங்கள் மூலமாக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 31 ஆண்டுகளாக கட்சி விதிகளில் எந்த திருத்தமும் கொண்டு வரப்படவில்லை. கட்சி விதிகளின்படி இல்லாத சிறப்பு நிர்வாகக் குழு நிறுவனர் ராதமாஸை தலைவராக அங்கீகரித்ததாகவும், அன்புமணியை செயல் தலைவராக ஏற்பதாகவும் குறிப்பிட்டுள்ளது சட்டவிரோதமானது. 2025- ஆம் ஆண்டு மே 29- ஆம் தேதி முதல் ராமதாஸ் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவித்தனர். பொதுக்குழுவால் மட்டுமே தலைவரை தேர்ந்தெடுக்க முடியும். மாம்பழம் சின்னம் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் பொதுச் செயலாளரைச் சேர்க்காமல் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதே கோரிக்கையுடன் தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்றம் நிராகரித்த நிலையில், இந்த வழக்கையும் நிராகரிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல் அன்புமணி ராமதாஸ் தரப்பில், அதிகாரம் இல்லாத நிறுவனர் ராமதாஸ் தொடர்ந்த வழக்கை நிராகரிக்க வேண்டும் எனக்கூறி மற்றொரு இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுக்கள் நீதிபதி தர்மதுரை முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, நிறுவனர் ராமதாஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “வழக்கு விசாரணையை காலதாமதம் செய்ய வேண்டும் என்ற நோக்கில் இந்த இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. தேர்தல் அறிவிப்புகள் வெளியிடுவதற்கு முன்பு எந்த உத்தரவும் பெறக்கூடாது என்ற நோக்கத்தில் தொடரப்பட்ட இந்த மனுக்களை நீதிமன்றம் ஏற்கக்கூடாது” எனத் தெரிவிக்கப்பட்டது.
இதனை ஏற்காத நீதிபதி, இந்த மனுக்களுக்கு ராமதாஸ் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் மார்ச் 11- ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

