விஜயின் தமிழக வெற்றிக் கழகம் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) இணைய வேண்டும் என்று தெரிவித்த பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுவதாக தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அதிரடியாக அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘ பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் பொறுப்பில் இருந்து ஏ.என்.எஸ்.பிரசாத் உடனடியாக விடுவிக்கப்படுகிறார். மேலும், சட்டமன்ற தேர்தல் மாநில பணிக்குழுவில் அவருக்கு அளிக்கப்பட்டிருந்த ஊடகத் துறை பொறுப்பாளர் என்ற பொறுப்பில் இருந்தும் அவர் விடுவிக்கப்படுகிறார்’ என்றும் நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக அவர், கும்பகோணத்தில் இன்று கட்சி நிர்வாகிகளுடன் சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ” நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வரும் என்பதும், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக வரும் தகவல்கள் அனைத்தும் வெறும் வதந்தி தான்” என்று தெரிவித்திருந்தார்.
அத்துடன், “தமிழகத்தில் பாஜக எத்தனை இடங்களில் போட்டியிடும் என்பதை பாஜக -அதிமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முடிவுற்றபின் தெரிவிக்கப்படும்” எனவும் நயினார் நாகேந்திரன் கூறியிருந்தார்.

