நீலகிரி கரைக்குன்னு பகுதியில் இரவு நேரத்தில் வெளியே சென்ற இருவரை யானை தாக்கி கொன்றுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
தேவர்சோலை அருகே உள்ள கரைக்குன்னு பகுதியில் நேற்றிரவு காட்டு யானை ஒன்று நடமாடியதாக கூறப்படுகிறது. அந்த நேரத்தில், அப்பகுதியில் இருந்த இருவரை யானை தாக்கியதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த சம்பவத்தில் இருவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
யானை தாக்குதலில் உயிரிழந்தவர்கள் அப்பையன் மற்றும் ரவி என அடையாளம் காணப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் வனத்துறை மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் 65 விழுக்காடு வனப்பகுதிகள் சூழ்ந்த இடமாக உள்ளது. இந்த வனப்பகுதியில் காட்டு யானைகள், புலி, சிறுத்தை, கரடி, காட்டெருமை, மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. தற்போது கோடை காலம் என்பதால் உணவு மற்றும் குடிநீருக்காக வனவிலங்குகள் குடியிருப்பில் நோக்கி வருகின்றன.
இந்நிலையில், யானை தாக்கி இருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, வனத்துறை அலுவலர்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விரைவில் கூடுதல் தகவல்கள் வெளியிடப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து வன சமூக ஆர்வலர் விஜி கிருஷ்ணராஜ் கூறுகையில், “நீலகிரி மாவட்டத்தில் கடந்த மாதம் உறைபனி பொழிவு அதிகரித்ததன் காரணமாக வனப்பகுதியில் செடி, கொடிகள் காய்ந்து கருகி காணப்படுகிறது. தற்போது கோடை காலம் என்பதால் நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் வறண்டுள்ளது.
எனவே, வனவிலங்குகள் உணவு மற்றும் குடிநீருக்காக குடியிருப்புகளை நோக்கி வருகின்றன. இதில் மனித-வனவிலங்கு மோதல் ஏற்பட்டு, கடந்த 6 மாதங்களில் மட்டும் 6 பேர் இறந்துள்ளனர். மேலும், இன்று இருவர் யானை தாக்கி உயிரிழந்த சம்பவம் பொதுமக்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டு பேரின் உடல்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்த வந்த வனத்துறையினர் மற்றும் காவல்துறையினரிடத்தில் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதில் ஒருவர், “முறையாக வனத்துறையினர் கண்காணிப்பதில்லை. ஏதாவது ஒரு இடத்தில் வாகனத்தை நிறுத்துவிட்டு தூங்கிவிடுகின்றனர். இதுவே, மனித-மிருக மோதலுக்கு முக்கியக் காரணமாக இருக்கிறது” என்று ஆதங்கத்துடன் தெரிவித்தார்.

