நிலுவை வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்க தேவையில்லாமல் வழக்குகளை தள்ளி வைக்குமாறு கேட்கக் கூடாது என வழக்கறிஞர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக பொறுப்பேற்ற எஸ்.ஏ. தர்மாதிகாரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் 55-வது தலைமை நீதிபதியாக எஸ்.ஏ. தர்மாதிகாரி பதவியேற்றார். ஆளுநர் மாளிகையில் அவர் பதவியேற்றுக் கொண்டார். தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்றத்தின் சார்பில் புதிய தலைமை நீதிபதிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
முன்னதாக பேசிய தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ். ராமன், போபால் விஷ வாயு விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக நீதிபதி தர்மாதிகாரி பாடுபட்டதை சுட்டிக் காட்டினார்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் மற்றும் பல்வேறு வழக்கறிஞர்கள் சங்கங்களின் நிர்வாகிகள், தலைமை நீதிபதியை வரவேற்றுப் பேசினர்.
ஏற்புரையாற்றிய தலைமை நீதிபதி தர்மாதிகாரி, நாட்டிலேயே 150 ஆண்டுகள் பழமையான சென்னை உயர் நீதிமன்றத்தின் உயர்ந்த மரபுகளை பாதுகாத்து வலுப்படுத்துவதே தனது முதல் கடமை எனக் குறிப்பிட்டார்.
வழக்கறிஞர்களும், நீதிபதிகளும் ஒரு வண்டியின் இரண்டு சக்கரங்கள் என கூறினாலும், வழக்கறிஞர்களை பங்குதாரர்களாகவே காண்பதாக தெரிவித்தார்.
வழக்கு விசாரணைகளை தேவையில்லாமல் தள்ளி வைக்க கேட்காமல், நிலுவை வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும், தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி, நவீனப்படுத்த வேண்டும். இளம் வழக்கறிஞர்களுக்கு அதிகாரம் வழங்க வேண்டும் எனவும் தலைமை நீதிபதி தர்மாதிகாரி கேட்டுக் கொண்டார்.

