ஈரான் போர் காரணமாக வளைகுடா நாடுகளில் அசாதாரண சூழல் நிலவும் நிலையில் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய்யை 30 நாட்களுக்கு மட்டும் வாங்க இந்தியாவிற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அரசின் கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் அறிவித்துள்ளார்.
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப்படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில் வளைகுடா நாடுகளில் உள்ள கிணறுகளில் கச்சா எண்ணெய் எடுப்பது அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இருப்பில் உள்ள கச்சா எண்ணெய்யை மற்ற நாடுகளுக்கு அனுப்புவதும் எண்ணெய் நிறுவனங்களுக்கு கடும் சவாலாக உள்ளது.
இதன் காரணமாக இலங்கை போன்ற ஆசிய நாடுகளில் எரிப்பொருள் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் நிலவுகிறது. மேலும், கச்சா எண்ணெய் விலையும் உயர்ந்து வருகிறது. எனினும், இந்தியாவில் தட்டுப்பாடு நிலவவில்லை; இந்தியாவில் எரிவாயு மற்றும் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு இல்லை என்றும், போதிய அளவில் எண்ணெய் நிறுவனங்கள் கையிருப்பில் இருப்பதாகவும் இந்திய அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில் அமெரிக்க அரசின் கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் தனது அதிகாரப்பூர்வ் எக்ஸ் தளப்பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் எரிசக்தி அஜெண்டாவின் விளைவாக கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது.
இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்க அமெரிக்க அரசின் கருவூலத்துறை சார்பில் 30 நாட்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது குறுகிய கால நடவடிக்கை என்பதால் ரஷ்ய அரசுக்கு குறிப்பிடத்தக்க நிதி நன்மை கிடைக்காது. ஏனெனில் கடலில் சிக்கியுள்ள எண்ணெய் கப்பல்கள் முறையாக கொண்டு செல்லும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தியா அமெரிக்காவின் நட்பு நாடு. எனவே, டெல்லி-அமெரிக்க எண்ணெய் கொள்முதலை அதிகரிக்கும் என்று நாங்கள் முழு நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறோம். எண்ணெய்யை வைத்து மற்ற நாடுகளுக்கு அழுத்தம் கொடுக்கும் ஈரானின் நடவடிக்கையைத் தணிக்கும் வகையில் இடைக்கால நடவடிக்கையை நாங்கள் எடுத்துள்ளோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க அரசின் அறிவிப்பால் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் நிம்மதி அடைந்துள்ளனர். மேலும், இந்தியாவில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு வரும் நாட்களில் நிகழாது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் இந்த அறிவிப்பு அமைந்துள்ளது.

