குடியாத்தம் அருகே வங்கியில் இருந்து பேசுவதாக ஏமாற்றி ஓய்வு பெற்ற கண் மருத்துவரிடம் ரூ.89 ஆயிரம் மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த ராஜா கோவில் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாசம் (79). இவர் ஓய்வு பெற்ற அரசு கண் மருத்துவர் ஆவார். தற்போது குடியாத்தம் அம்பாபுரம் பகுதியில் தனியாக கண் மருத்துவமனை நடத்தி வருகிறார். இந்நிலையில், அவர் தனது வங்கி கணக்கு தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனை குறித்து வங்கியில் புகார் அளித்திருந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே தனது மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருந்த போது அவரது செல்போனுக்கு ஒரு மர்ம நபர் அழைத்துள்ளார்.
அந்த நபர், “நாங்கள் வங்கியில் இருந்து பேசுகிறோம். உங்கள் வங்கி ஆப் சரியாக செயல்படவில்லை. அதனை சரி செய்ய உங்கள் செல்போனுக்கு வரும் ஓடிபி (OTP) எண்ணை சொல்லுங்கள்” என்று கூறியுள்ளார். அந்த மர்ம நபர் கூறியது உண்மை என நம்பிய மருத்துவர் பிரகாசம், தனது செல்போனுக்கு வந்த ஓடிபி எண்ணை தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதன்பின் சில நிமிடங்களில் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.89 ஆயிரம் பணம் எடுக்கப்பட்டுள்ளதாக குறுஞ்செய்தி வந்துள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த பிரகாசம், உடனடியாக வங்கியை தொடர்பு கொண்டு விசாரித்தார். அப்போது வங்கி அதிகாரிகள் இது மோசடி சம்பவமாக இருக்கலாம் என தெரிவித்து, போலீசில் புகார் அளிக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்து மருத்துவர் பிரகாசம் நேற்று இரவு குடியாத்தம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை பெற்ற போலீசார், இந்த சம்பவம் தொடர்பாக வேலூரில் உள்ள சைபர் கிரைம் அலுவலகத்தில் புகார் அளிக்கும்படி அறிவுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: வழிப்பறி திருடனை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த போலீஸ் – கோவையில் பரபரப்பு
மேலும், இந்த மோசடி சம்பவம் குறித்து குடியாத்தம் நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே பொதுமக்கள் எந்த சூழலிலும் வங்கியில் இருந்து அழைப்பதாக கூறி கேட்கப்படும் ஓடிபி எண், ஏடிஎம் பின், வங்கி விவரங்கள் போன்றவற்றை யாரிடமும் பகிர வேண்டாம் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

