மீரட்டில் உள்ள மருத்துவக் கல்லூரியில் பயின்று வந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர் ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்ட நிலையில், இச்சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
உத்தரப்பிரதேச மாநிலத்தின் மீரட் நகரில் (டெல்லி பிராந்தியத்துக்கு உட்பட்டது) எல்.எல்.ஆர்.எம் மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் பயின்று வந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த மருத்துவ மாணவர் ஒருவர் தான் தங்கியிருந்த வாடகை வீட்டில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டார். கயிற்றில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மருத்துவ மாணவர் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் குறித்து மருத்துவக் கல்லூரியின் துணை முதல்வர் டாக்டர் ஞானேஷ்வர் டோங்க் கூறுகையில், “இறந்தவரின் பெயர் கிரி பிரசாத். இவர் தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர். மீரட் நகரின் பாவன்பூர் காவல் நிலைய பகுதியில் உள்ள கோகுல் தாம் காலனியின் டி-பிளாக்கில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி படித்து வந்தார்.
தற்போது எம்.டி பட்டப் படிப்பை படித்து வந்த கிரி பிரசாத், தான் தங்கியிருந்த வீட்டில் உயிரை மாய்த்துக்கொண்டார். ஹோலி பண்டிகையை முன்னிட்டு, விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் நிறைய மாணவர்கள் தங்களது ஊர்களுக்கு சென்றுள்ளனர். இந்த நேரத்தில் வீட்டில் தனியாக இருந்த கிரி பிரசாத் விபரீத முடிவை எடுத்துள்ளார். எதிர்கால மருத்துவரின் இந்த முடிவுக்கான காரணத்தை கண்டறிய மருத்துவக் கல்லூரியும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது” என்றார்.
நேற்று (மார்ச் 4) வட மாநிலங்களில் ஹோலி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்ட நிலையில், கோகுல் தாம் காலனியிலும் அனைவரும் வண்ணப்பொடிகளை பூசிக் கொண்டாடியுள்ளனர். ஆனால் நீண்ட நேரமாகியும் கிரி பிரசாத் வீட்டை திறக்காமல் இருந்துள்ளார். முதலில் வண்ணப் பொடிகளை பூசி விடுவர்களை என பயந்து அவர் உள்ளேயே இருப்பதாக நினைத்த வீட்டின் உரிமையாளருக்கு, நேரம் செல்ல செல்ல சந்தேகம் அதிகரித்திருக்கிறது.
இதையும் படிங்க: காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் அறிவிப்பு – யார் இந்த கிறிஸ்டோபர் திலக்?
எனவே, கிரி பிரசாத்தின் வீட்டுக் கதவை தட்டியுள்ளார். ஆனால் நீண்ட நேரமாக கதவைத் தட்டியும் உள்ளே இருந்து எந்த பதிலும் வரவில்லை என தெரிகிறது. இதனால் பதற்றமடைந்த உரிமையாளர் ஸ்டூல் போட்டு ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்துள்ளார். அப்போது கிரி பிரசாத்தின் உடல் கயிற்றில் தொங்கியவண்ணம் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து, உடனடியாக போலீஸுக்கு தகவல் கொடுத்துள்ளார்.
தகவலின்பேரில் அங்கு சென்ற போலீசார், கதவை உடைத்து உள்ளே சென்று கிரி பிரசாத்தின் உடலை மீட்டனர். தொடர்ந்து தடயவியல் குழு வரவழைக்கப்பட்டு, தடயங்கள் சேகரிக்கப்பட்ட பின்னர் உடலானது பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. உயிரிழந்த மருத்துவ மாணவர் கிரி பிரசாத்தின் செல்போன் அழைப்பு விவரங்களை நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்தவுடன், அதிகாரிகள் கோகுல் தாம் காலனிக்குச் சென்று கிரி பிரசாத்தின் விவரங்களை சேகரித்து, அவருடைய குடும்பத்தாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

