சென்னை உயர் நீதிமன்றத்திற்கு புதிய தலைமை நீதிபதியாக சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரியை நியமித்து, குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் 54-வது தலைமை நீதிபதியாக மஹிந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா, கடந்த 2025ஆம் ஆண்டு ஜூலை 21ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டார். அவரது பதவிக்காலம் இன்றுடன் (மார்ச் 05) நிறைவடைந்தது. இதையடுத்து, புதிய தலைமை நீதிபதி பதவிக்கான பெயர் பட்டியல் உச்சநீதிமன்ற கொலீஜியத்தின் பரிந்துரையின் பேரில் மத்திய சட்டத்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுடன் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது.
இதைத் தொடர்ந்து, கேரளாஉயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உள்ள சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரியை சென்னை உயர்நீதிமன்றத்தின் 55-வது தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 1966- ஆம் ஆண்டு ஜூலை 08- ஆம் தேதி சத்தீஸ்கர் மாநிலத்தின் ராய்ப்பூரில் பிறந்தவர் சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி. நாக்பூர் பல்கலைக்கழகத்தில் வணிகம் மற்றும் சட்டத்தில் இளங்கலை படிப்பை முடித்த தர்மாதிகாரி, 1992- ஆம் ஆண்டு ஜபால்பூரில் வழக்கறிஞர் பணியைத் தொடங்கினார். கடந்த 2000- ஆம் ஆண்டு முதல் 2015- ஆம் ஆண்டு வரை மத்திய அரசின் கீழ் உள்ள கலால் துறை, வருமான வரித்துறை, ரிசர்வ் வங்கியில் நிலையான ஆலோசகராகப் பணியாற்றியுள்ளார்.
2016- ஆம் ஆண்டு மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக பணியாற்றிய அவர், பின்னர் 2018- ஆம் ஆண்டு நிரந்தர நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து 2025- ஆம் ஆண்டு கேரளா உயர்நீதிமன்றத்துக்கு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். போபால் விஷவாயு வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்காக நல ஆணையராகவும் திறம்பட பணியாற்றியுள்ளார்; பல்வேறு முக்கிய வழக்குகளையும் கையாண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை மக்கள் மாளிகையில் நடக்கும் விழாவில் புதிய தலைமை நீதிபதிக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் மற்றும் மூத்த வழக்கறிஞர்கள்,முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

