10 ஆண்டுகளாக அடிப்படை வசதி செய்து தரவில்லை என கூறி சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாக பேனர் வைத்து பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தேனி அரண்மனைபுதூர் அருகே போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருமலை நகர், பத்மாவதி நகர், எலெக்ட்ரானிக் சிட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 500- க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த குடியிருப்புப் பகுதிகளில் கடந்த 10 ஆண்டுகளாக சாலை வசதி, தெருவிளக்கு, வடிகால் வசதி உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதியும் செய்து தரவில்லை என க் கூறி அப்பகுதி மக்கள் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட போவதாக பேனர்கள் வைத்து தங்களது எதிர்ப்புகளை தெரிவித்தனர்.
பள்ளிக் குழந்தைகள், முதியவர்கள் கடும் சிரமத்துடன் இந்த சாலையை பயன்படுத்தும் நிலை இருப்பதாகவும் இரவு நேரங்களில் தெருவிளக்கு கூட இல்லாததால் விஷ ஜந்துக்கள் போன்றவற்றால் பாதிப்பு ஏற்பட்டு வருவதாகவும் கூறுகின்றனர்.
தங்கள் பகுதிகளில் அடிப்படை வசதி செய்து தரக் கோரி மாவட்ட நிர்வாகம், போடிநாயக்கனூர் எம்.எல்.ஏ. உள்ளிட்டோரிடம் பலமுறை புகார் மனு கொடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் தேர்தல் வரும் போதெல்லாம் தங்களது கோரிக்கைகளான அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படும் என கூறி விட்டு அதன்பின் தங்கள் பகுதிக்கு யாரும் வருவதில்லை என மக்கள் புகார் தெரிவித்தனர்.
தங்கள் பகுதிகளுக்கு சாலை வசதி, தெரு விளக்கு வசதி, வடிகால் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதி செய் தரவில்லை என்றால் தேர்தலை புறக்கணிப்பதை தவிர தங்களுக்கு வேறு வழி இல்லை எனக் கூறி தங்களது எதிர்ப்புகளை தெரிவித்தனர்.
இந்த நிலையில் திருமலை நகர், பத்மாவதி நகர், எலெக்ட்ரானிக் சிட்டி சேர்ந்த 500- க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வரும் சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவித்துள்ளனர். மேலும், அடிப்படை வசதிகளை செய்து தராததால் 2026 சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாகவும், அரசியல் கட்சியினர் யாரும் ஊருக்குள் ஓட்டு கேட்டு வர வேண்டாம் என்றும் பல்வேறு இடங்களில் பேனர் வைத்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

