தமிழ்நாடு சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் கூட கூட்டணியில் மாற்றம் ஏற்படலாம் என்றும், கூட்டணிக்கு காங்கிரஸ் வருமா? என்பதற்கு காலம் தான் பதில் சொல்லும் என்றும் தவெக துணைப் பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் தெரிவித்தார்.
சென்னை விமான நிலையத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது திமுக கூட்டணி பற்றி பேசிய அவர், “திமுக கூட்டணியில் காங்கிரஸ் இல்லையென்றால், அந்த கட்சியால் 25 தொகுதிகளில் கூட வெற்றி பெற முடியாது. காங்கிரஸ் ஒரு தேசிய கட்சி. தமிழக மக்கள் எப்போதும் விரும்பக் கூடிய கட்சி அது. கடந்த 25 ஆண்டு காலமாக திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணியில் இருக்கிறது. அவர்களுக்கு மரியாதை வேண்டும் என அவர்கள் கேட்கிறார்கள். அமைச்சர் ராஜகண்ணப்பன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் கோ.தளபதி ஆகியோர் தான் காங்கிரஸை கீழ்தரமாக பேசி விமர்சனம் செய்தனர்” என்றார்.
தொடர்ந்து பேசிய சி.டி.ஆர். நிர்மல் குமார், “திமுக ஒவ்வொரு நாளும் தமிழக வெற்றிக் கழகத்தின் வளர்ச்சியை பார்த்து பயப்படுகிறது. அதனால் தான் யார் வந்தாலும் கூட்டணியில் சேர்த்துக் கொள்கிறார்கள். முதல்வர் மகளிர் உரிமைத் தொகையாக அண்மையில் 5000 ரூபாய் வழங்கிய பின்னரும் அவருக்கு கூட்டணி மீது நம்பிக்கை இல்லை. இதனால் தான் தேமுதிகவை கூட்டணியில் இணைத்துக் கொண்டார்.
தவெகவுடன் திமுகவை தவிர மற்ற அனைவரும் கூட்டணி வைக்க ஆசைப்பட்டனர். எல்லாரும் எங்களுடன் கூட்டணி அமைக்க காத்திருந்தாலும் யார் எங்களின் கூட்டணிக்கு பொருத்தமாக இருக்கிறார்களோ அவர்களுடன் தான் நாங்கள் கூட்டணி வைப்போம். தமிழ்நாட்டில் எந்த கூட்டணியும் வலுவாக இல்லை.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை பொருத்தவரை கடைசி நேரம் வரை கூட்டணி மாறுவதை நாம் பார்த்திருக்கிறோம். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் கூட கூட்டணியில் மாற்றம் ஏற்படலாம். மக்கள் ஏற்றும் கொள்ளும் கூட்டணியை நிச்சயம் எங்கள் தலைவர் விஜய் விரைவில் அறிவிப்பார்.
தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக் கழகத்தை தவிர அனைத்து கட்சிகளுக்கும் பொதுக்கூட்டம் நடத்த எந்த பிரச்சனையும் வருவதில்லை. தமிழக வெற்றிக் கழகம் அனைத்து ஆவணங்களையும் கொடுத்து அனுமதி வாங்குவதற்கு 20 நாட்கள் ஆகிறது. காங்கிரஸ் கட்சி தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைக்குமா என்பதை காலம் தான் முடிவு செய்யும்” என்றும் அவர் கூறினார்.

