கும்பகோணம் வரதராஜப் பெருமாள் கோயிலில் 12 ஆண்டுகளுக்கு பிறகு அத்திவரதர் பாதாள அறையில் இருந்து வெளிவந்து அருள் பாலிக்கிறார்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம், பிரம்மன் கோவில் தெருவில், கடந்த 1739ம் ஆண்டு கட்டப்பட்ட வரதராஜ பெருமாள், வேதநாராயண பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில், அத்திமரத்தினால் உருவாக்கப்பட்ட, அத்திவரதரை தரிசனம் செய்தால் சகல தோஷங்களும், முன்ஜென்ம பாவங்கள் விலகும் என்பது ஐதீகம்.
கடந்த 1915ம் ஆண்டு அத்திவரதர் பாதாள அறையில் இருந்து வெளியே வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதன் பின்னர் சுமார் 98 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 2013ம் ஆண்டு, அத்திவரதர் வெளியே வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்நிலையில் 12 ஆண்டுகளுக்கு பிறகு இன்று முதல் வரும் 10ம் தேதி வரை ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் வெளியே வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளார்.
இதற்காக நேற்று மாலை ஒன்றரை அடி உயரத்தில், அத்திமரத்தால் செய்யப்பட்ட அத்திவரதர், பாதாள அறையில் இருந்து எடுத்து வரப்பட்டு, தைலகாப்பு அலங்காரம் செய்து, சிறப்பு தீபாரதனை காண்பிக்கப்பட்டு, பக்தர்களின் பார்வைக்காக கோவில் மண்டபத்தில் வைக்கப்பட்டது. விழா நாட்களில் தைலகாப்பு, புஷ்பசேவை, ஊஞ்சல் சேவை ஆகியவை நடக்கிறது.
தினமும் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் சாமி தாிசனம் செய்யலாம் என நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அத்திவரதரை தரிசனம் செய்து வருகின்றனர். ஏற்கனவே இது போன்று காஞ்சிபுரம் அத்திவரதர் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியே வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கமாக உள்ளது.

