தெலுங்கு திரையுலகின் இளம் காதல் ஜோடிகளான விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா திருமணம், ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் இன்று கோலாகலமாக நடைபெற்றது.
இருவரும் பல ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், இன்று காலை 10.10 மணிக்கு திருமணம் நடைபெற்றது. பாரம்பரிய தெலுங்கு முறைப்படி காலை திருமணம் நடைபெற்ற நிலையில், மாலை 4:30 மணிக்கு ராஷ்மிகாவின் கொடவா சமூக முறைப்படி திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா புதுமண தம்பதிக்கு திரையுலக பிரபலங்கள் தொடர்ந்து வாழ்த்துகள் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
‘கீதா கோவிந்தம்’ படத்தின் தயாரிப்பாளர் பன்னி வாசு (bunny vasu) வெளியிட்டுள்ள வாழ்த்து பதிவில், “நீங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் தேர்ந்தெடுத்துள்ளது சிறப்பு.
விஜய் தேவரகொண்டாவின் விஸ்வாசமும், ராஷ்மிகாவின் தூய இதயமும் ஒன்றாக இணைந்தது ஒரு மேஜிக். இந்த திருமணம் உங்களுக்கு அன்பு, வலிமை, மகிழ்ச்சி ஆகியவற்றை வழங்கும் என வாழ்த்துகிறேன்” என பதிவிட்டுள்ளார்.
விஜய் தேவரகொண்டா -ராஷ்மிகா மந்தனா திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஹைதராபாதில் வரும் மார்ச் 4- ம் தேதி நடைபெறுகிறது.

