இளைஞர்களை போதைக்கு அடிமையாக்கிய துரோகி ஸ்டாலின் என்று எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி பேசியுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி, ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ எழுச்சிப் பயணத்தை கடந்த 2025, ஜூலை 7ம் தேதி மேட்டுப்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் தொடங்கினார். இன்று 183வது தொகுதியாக அம்பத்தூரில் பரப்புரை மேற்கொண்டார்.
போதைக்கு அடிமையாக்கிய துரோகி ஸ்டாலின்
அப்போது எடப்பாடி கே.பழனிசாமி ஆற்றிய உரையில், இன்று மதுரையில் எடப்பாடி பழனிசாமி துரோகி என்று ஸ்டாலின் பேசியிருக்கிறார். யார் துரோகி? ஸ்டாலின் தான் துரோகி. கருணாநிதி குடும்பம் தமிழ்நாட்டுக்கு செய்தது துரோகம். திமுக ஆட்சி பொறுப்பேற்று 5 ஆண்டு நிறைவு பெறுகிறது. மக்களுக்கு என்ன நன்மை கிடைத்தது? ஸ்டாலின் குடும்பத்துக்குத் தான் பலன் கிடைத்தது. இந்த 5 ஆண்டில் போதை பொருள் விற்பனை அமோகமாகிவிட்டது. எது கிடைக்கிறதோ இல்லையோ கஞ்சா கிடைக்கிறது. இளைஞர்களை போதைக்கு அடிமையாக்கிய துரோகி ஸ்டாலின். நம் பிள்ளைகளை சீரழித்தவர் ஸ்டாலின். பலமுறை நான் எடுத்துச்சொன்னேன் செவி சாய்க்கவில்லை. அது பற்றி கவலைப்படவில்லை. ஏனெனில் போதைப் பொருள் விற்பதே திமுகவினர் தான். மாணவர்களை, இளைஞர்களை பொதுமக்களை சீரழித்த துரோகி ஸ்டாலின்.
நான்கு ஆண்டுகளில் ரூ.24 ஆயிரம் கோடி கொள்ளை
டாஸ்மாக் 10 ரூபாய் யாரு? பாலாஜி. யாரும் மறக்க மாட்டாங்க. தமிழ்நாடு முழுவதும் 6 ஆயிரம் மதுக்கடை இருக்கிறது. டாஸ்மாக்கில் ஒரு நாளைக்கு ஒன்றரை கோடி பாட்டில் விற்கிறது. ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக பெறுவதால் நாளொன்றுக்கு 15 கோடி ரூபாயும், மாதத்துக்கு 450 கோடி ரூபாயும், வருடத்துக்கு 5400 கோடியுமாக இந்த நான்காண்டுகளில் 24 ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளை அடித்திருக்கிறார்கள். விஞ்ஞான முறையில் ஊழல் செய்தனர். இவ்வளவு ஊழல் செய்துவிட்டு எங்களைப் பற்றி பேச அருகதை இல்லாதவர் ஸ்டாலின். பள்ளி படிக்கும் மாணவர்களுக்கு ஆல் பாஸ் போட்டுக்கொடுத்தோம். கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு நடத்தினோம். தேர்வு நடத்தினோம். இப்படி அதிமுக ஆட்சியில் மக்களுக்கு தேவையான உதவிகள் செய்து கொடுத்தோம். அதனால் தான் அதிமுக ஆட்சி பொற்கால ஆட்சி என்று போற்றப்படுகிறது.
பயப்படுபவர்கள் இருட்டில் கத்திக்கொண்டே செல்வார்கள்
தேர்தல் அறிவிப்பு அடுத்த மாசம் வரும். ஏப்ரலில் தேர்தல் வருகிறது. இந்த 5 ஆண்டில் தினம் ஒரு திட்டத்துக்குப் பேர் வைப்பார். போட்டோ ஷூட் விளம்பரம் நடக்கும். இது தான் நிலைமை. ரெய்டுக்குப் பயப்பட மாட்டாராம். பயப்படுபவர்கள் தான் இருட்டில் போகும்போது கத்திக்கொண்டே செல்வார்கள். அது போன்றுதான். என் மீது 4800 கோடி ஊழல் வழக்கு போட்டீங்க. என் மீது வழக்குப் போட்ட ஆர்.எஸ்.பாரதி திரும்ப பெறுவேன் என்று சொன்னார். நான் நடத்துகிறேன் என்று மறுத்துவிட்டேன். இதுவரை என்னை பற்றி பேசி பொய்யான கருத்தை பதிய வைத்தார். அதனால் வழக்கை நடத்தினேன். நீதிபதியே ஏன் நடத்துறீங்க என்று கேட்டார். அப்போது, ‘இந்தியாவிலேயே தன் மீது இருக்கும் வழக்கை நடத்துவேன் என்று சொன்ன முதல் முதல்வர் நீங்கள் தான்’ என்று சொன்னார்.
அமைச்சர் மீது வழக்குப் பதிய உத்தரவு வந்துவிட்டது
தில்லு.. திராணி இருந்தால் உங்கள் அமைச்சர் மீது வழக்குப் போட்டதை நீதிமன்றத்தில் சந்தியுங்கள். நான் நிரபராதி என்று சொல்லிவிட்டனர். உச்ச நீதிமன்றத்திலும் நிரபராதி என்று தீர்ப்பு பெற்று உங்கள் முன்பு நிற்கிறேன். மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை. உங்களுக்குப் பயம் வந்துவிட்டது. நேற்றைய முன்தினம் அமைச்சர் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு வந்துவிட்டது. பயம் வந்துவிட்டதால் என்ன பேசுவது என்று தெரியாமல் உளறுகிறார். ஒருவர் 453 நாள் டாஸ்மாக் வழக்கில் சிறையில் இருந்தார். இப்போது அமைச்சர் நேரு ஹவாலா மோசடியில் சிக்கியுள்ளார். 3 முறை அமலாக்கத்துறை சோதனை நடத்தி டிஜிபிக்கு அறிக்கை அனுப்பியது. அதிமுக சார்பில் வழக்குப் போட்டோம். நீதிமன்றம் குற்றம் நடந்த ஆதாரம் இருக்கிறது என்று வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது. அதனால் பயந்திருக்கிறார் ஸ்டாலின்.
உடலில் இருக்கும் உறுப்பை திருடும் கட்சி தான் திமுக
2 ஆண்டுகளுக்கு முன்பு பழனிவேல் தியாகராஜன் 30 ஆயிரம் கோடியை கையில் வைத்துக்கொண்டு சபரீசனும், உதயநிதியும் தடுமாறுகிறார்கள் என சொன்னார். அப்பவே 30 ஆயிரம் கோடி என்றால், இப்போது எத்தனை ஆயிரம் கோடி கொள்ளையடித்து இருப்பார்கள்? ஹவாலா பணம், வெளிநாட்டுக்கு பணம் அனுப்பியதெல்லாம் செய்தியில் வந்துள்ளது. இப்படிப்பட்ட அலங்கோல ஆட்சி மீண்டும் வர வேண்டுமா? பணம், நகையை திருடுவாங்க. உடலில் இருக்கும் உறுப்பை திருடும் கட்சி திமுக தான்.
நேற்று முன்தினம் நிதியமைச்சர் வறுமை ஒழிக்கப்பட்டது என்றார். எங்கே ஒழிச்சீங்க? வறுமை காரணமாக உறுப்பை விற்கும் அவல ஆட்சி நடக்கிறது. எம்.எல்.ஏ மருத்துவமனையில் கிட்னி திருட்டு நடப்பதை திமுக அரசே கண்டுபிடித்தது. நாமக்கல் மாவட்டத் தொழிலாளி கிட்னியை முறைகேடாக எடுத்துள்ளனர். இப்படிப்பட்ட ஆட்சி தேவையா? வறுமை இருப்பதால் தான் கிட்னியை விற்கின்றனர். பொதுமக்கள் யாராவது திமுகவினர் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்திருந்தால் உடலில் இருக்கும் உறுப்பு பத்திரமா இருக்கிறதா என்று ஸ்கேன் செய்து பார்த்துக்கொள்ளுங்கள். திமுகவினர் நடத்தும் மருத்துவமனைக்குச் செல்லாதீர்கள்.
5 ஆண்டுகால கடன் சுமை ஐந்தரை லட்சம் கோடி
பட்ஜெட் கூட்டம் நடந்தது. இடைக்கால பட்ஜெட்டில் சட்டமன்றத்தில் நான் பல கேள்விகள் கேட்டேன். கடன் அளவு 10 லட்சத்து 99 ஆயிரம் கோடி ரூபாய். நீங்கள் தான் கடனை கட்ட வேண்டும். உங்கள் தலையில் தான் விடியும். 73 ஆண்டுகால தமிழக ஆட்சி வரலாற்றில் எத்தனையோ அரசுகள் மாறி மாறி ஆட்சிக்கு வந்துள்ளன. 2021ம் ஆண்டு வரை ஒட்டுமொத்தமாக இருந்த கடன் 5 லட்சத்து 18 ஆயிரம் கோடி மட்டுமே. ஆனால் அதைவிட திமுகவின் இந்த ஐந்தாண்டு கால கடன் சுமை ஐந்தரை லட்சம் கோடி. நம் எல்லோரையும் கடனாளியாக்கிவிட்டார். வரி போட்டுத்தான் கடனை அடைப்பார்கள். இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கிய முதல் மாநிலம் தமிழ்நாடு.
வெளிநாட்டுக்கு சென்ற ஹவாலா பணம் மீட்கப்படும்
சரி, கடன் வாங்கி திட்டம் கொண்டு வந்தீர்களா? இல்லை. அதிமுக ஆட்சியில் 2020-21 வரி வருவாயை விட 2024-25ல் கூடுதல் வரி வருவாய். ஒரு லட்சத்து 36 ஆயிரம் கோடி வருவாய் கூடுதல் வந்திருக்கிறது. அதிக கடன் வாங்கிட்டீங்க. திட்டம் இல்லை. எல்லாம் திமுக குடும்பத்துக்கும், ஹவாலா பணம் வெளிநாட்டுக்கும் போய்விட்டது. மீண்டும் அதிமுக ஆட்சி மலரும். வெளிநாட்டுக்கு சென்ற ஹவாலா பணத்தை பறிமுதல் செய்து மக்களுக்கு கொண்டு வருவோம். திமுக என்றால் குடும்பம். குடும்பம் என்றால் திமுக. எத்தனையோ கட்சி இருக்கிறது. எந்த கட்சியிலாவது குடும்ப ஆட்சி, வாரிசு அரசியல் இருக்கிறதா? குடும்ப ஆட்சிக்கு வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தல் இது.
கருணாநிதி பேரனுக்கு துணை முதல்வர் பதவி
கருணாநிதி முதல்வர், ஸ்டாலின் முதல்வர், அதன்பின் உதயநிதி துணை முதல்வர். அவருக்கு என்ன தகுதி இருக்கிறது? திமுகவில் ஆளே இல்லையா? எப்போதும் எமர்ஜென்சியில் சிறையில் அடைத்தனர் என்பார். உதயநிதி சிறைக்குப் போனாரா? சிறைக்கு சென்ற யாருக்கும் துணை முதல்வர் பதவி கிடைக்கவில்லை. ஒரே அடையாளம் ஸ்டாலின் மகன், கருணாநிதி பேரன் அந்த அடையாளம் தான் துணை முதல்வர் பதவி. அதிமுக ஜனநாயகக் கட்சி. கட்சிக்கு உழைப்பவர்கள், தலைமைக்கு விசுவாசமாக இருப்பவர்கள் யார் வேண்டுமானாலும் முதல்வராகவும், பொதுச்செயலாளர் ஆக முடியும். ஸ்டாலின் அவர்களே. உங்களால் சொல்ல முடியுமா? அம்மா சொன்னார்கள். எனக்கு பின்னல் 100 ஆண்டுகள் அதிமுக தொடரும் என்றார்கள்.
மருத்துவ கல்லூரியை கட்டியது நாம்.. திறந்தது திமுக
திருவள்ளூரில் மாவட்ட தலைநகரில் 400 கோடியில் மருத்துவக் கல்லூரி கட்டியது நாம். திறந்தது திமுக. புதிதாக 6 மாவட்டம் உருவாக்கினோம். இப்படி ஒரு திட்டமாவது சொல்லுங்கள். சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அடிக்கல் நாட்டினார். இது அதிமுக சாதனை. இப்படி ஒரு பெரிய திட்டமாவது பார்க்க முடிந்ததா? ஊழல் மட்டுமே செய்த ஆட்சி திமுக.
மாற்றுத்திறனாளிகள் சாபம் திமுகவை சும்மா விடாது
அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் கொடுப்பேன் என்று சொல்லிவிட்டு, இப்போது உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் என்று கொடுத்துள்ளார். பழைய ஓய்வூதிய திட்டத்தில் அரசு ஊழியர்களின் பங்களிப்பு இல்லை. ஸ்டாலின் அறிவித்ததில் ஊழியர்களின் பங்களிப்பு உள்ளது. மாற்றுத்திறனாளிகள் பென்ஷன் தொகையை உயர்த்த கோரிக்கை வைத்தார்கள். பஸ்ஸில் ஏற்றிச்சென்று சித்ரவதை செய்தார்கள். அவர்களின் சாபம் திமுகவை சும்மா விடாது. இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

