22-வது ‘தேசிய மவுன்டெய்ன் பைக் சாம்பியன்ஷிப்’ போட்டியில் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்ற அரசு பள்ளி மாணவருக்கு ஊர் மக்களும், ஆசியர்களும் மேள தாளத்துடன் வரவேற்பு அளித்தனர்.
22-வது தேசிய தேசிய மவுன்டெய்ன் பைக் சாம்பியன்ஷிப் போட்டிகள் கடந்த 12-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை நான்கு நாட்கள் அருணாச்சலப் பிரதேசத்தில் நடைபெற்றது. இந்தியா முழுவதும் இருந்து 29 மாநிலங்களைச் சேர்ந்த 512 பேர் இதில் பங்கேற்றனர். தமிழ்நாடு சார்பில் 20க்கும் மேற்பட்டோர் இந்த போட்டியில் கலந்து கொண்டனர். இதில் 9 தங்கம், 5 வெள்ளி, 3 வெண்கலம் என 17 பதக்கங்களை பெற்று தமிழ்நாடு சாம்பியன் பட்டம் வென்றது.
தமிழகத்தைச் சேர்ந்த வீரர்கள் அதிகமானோர் பதக்கங்கள் வென்ற நிலையில் 16 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் பிரனேஷ் என்ற மாணவர் தங்கம் வென்றார். இரு பிரிவுகளில் நடந்த போட்டிகளில் கோவை கருமத்தம்பட்டி பகுதியைச் சேர்ந்த அந்தோணி ராஜ் என்ற மாணவர் வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்களை வென்றார். இவர் கருமத்தம்பட்டி அடுத்த வாகராயம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.
சிறு வயது முதலே சைக்கிள் ஓட்டுவதில் அதிக ஆர்வம் கொண்ட அந்தோணி ராஜ், தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்று வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்களை வென்றது அந்த கிராம மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக, பதக்கங்களுடன் திரும்பிய அந்தோணி ராஜுக்கு ஊரின் எல்லையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
பொதுமக்கள், பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் என ஏராளமானோர் ஒன்று திரண்டு அந்தோணி ராஜுக்கு மேளதாளம் முழங்க, சால்வை அணிவித்து மலர் கொத்து வழங்கி வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து வாகராயம்பாளையம் பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து பள்ளி வரை சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் அந்தோணி ராஜை ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். மேலும் அவருக்கு பள்ளி வளாகத்தில் ஆசிரியர்களும் மாணவர்களும் வாழ்த்துகள் தெரிவித்தனர்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு தனது வெற்றி குறித்து அந்தோணி ராஜ் கூறுகையில், “எனக்கு சிறுவயது முதல் சைக்கிள் ஓட்டுவதில் ஆர்வம் அதிகமாக இருந்தது. எனது பெற்றோர் கூலி வேலைக்கு செல்பவர்கள் என்பதால் என்னால் புதிய சைக்கிள் வாங்க முடியவில்லை. எனவே எனது நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் பழைய சைக்கிள்களை வாங்கி பயிற்சி மேற்கொண்டேன்.
அந்த பயிற்சி மூலம் மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்றேன். அதனைத் தொடர்ந்து தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள புதிய சைக்கிள் தேவைப்பட்டதால் ஆசிரியர்களும், நண்பர்களும் சேர்ந்து எனக்கு புதிய சைக்கிள் வாங்கிக் கொடுத்தனர். இந்த சைக்கிளை ஓட்டி, போட்டியில் பங்கேற்று வெள்ளிப் பதக்கமும், வெண்கல பதக்கமும் வென்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
போட்டி நடப்பதற்கு ஒருநாள் முன்பு பயிற்சியின் போது கீழே விழுந்து காயங்கள் ஏற்பட்ட நிலையிலும், என்னுடைய குடும்ப சூழ்நிலையையும், எனக்கு உதவிய நண்பர்களையும் கருத்தில் கொண்டு விடாமுயற்சியுடன் சைக்கிள் ஓட்டியதால் என்னால் பதக்கம் வெல்ல முடிந்தது. அடுத்து சர்வதேச அளவிலான போட்டியில் கலந்து கொள்ளப் போகிறேன்” என்று தெரிவித்தார்.

