பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் மற்றும் ஆளுநர் குறித்து அவதூறு கருத்து தெரிவித்தல் உள்ளிட்ட புகாரில், திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
சென்னை கொடுங்கையூரில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 100-வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் கடந்த 2023 ஜூன் 16ஆம் தேதி நடைபெற்றது. அந்த கூட்டத்தில் திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, தமிழக ஆளுநர், முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பா.ஜ.க முன்னாள் தலைவர் அண்ணாமலை மற்றும் நடிகை குஷ்பு ஆகியோர் குறித்து ஆபாச வார்த்தைகளால் விமர்சித்ததாக கூறப்படுகிறது.
இதுதொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதற்கு பெண்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது ஆபாசமாக பேசுவது, கலகத்தை துாண்டுவது, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் கொடுங்கையூர் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கு, சென்னை 10வது பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்ற நடுவர் பி.ரேவதி கீழ் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிவாஜி கிருஷ்ணமூர்த்தி தரப்பில், உயர் அதிகாரிகளின் அழுத்தத்தின் பேரில் பொய் வழக்கு போடப்பட்டுள்ளது. கலவரத்தை துாண்டும் வகையில் பேசியதாக, கூட்டத்தில் பங்கேற்றவர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் புகார் கொடுக்கவில்லை என தெரிவிக்கப்பட்டது.
அதற்கு அரசு தரப்பில், முன்னாள் முதலமைச்சர், பா.ஜ.க தலைவர்கள், முன்னாள் அமைச்சர் ஆகியோர் குறித்து ஆபாசமான வார்த்தைகளால் அவதூறு பரப்பும் வகையில் பேசியுள்ளார். அந்த குற்றச்சாட்டு சாட்சிகள் மற்றும் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களை கேட்ட நடுவர் பிறப்பித்த உத்தரவில், சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீதான கலகத்தை துாண்டுவது என்ற குற்றச்சாட்டை அரசு தரப்பு தகுந்த சாட்சிகளுடன் நிரூபிக்கவில்லை. ஆனால், மற்ற குற்றச்சாட்டுகளை தகுந்த சாட்சிகளுடன் சந்தேகத்துக்கு இடமின்றி அரசு தரப்பு நிரூபித்துள்ளது.
எனவே, ஆபாசமாக பேசியதற்கு 3 மாதம் சிறை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதமும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் குற்றச்சாட்டில் ஒரு ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், இரு சமூகங்களுக்கு இடையே மோதலை ஏற்படுத்தும் குற்றச்சாட்டுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும், இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். ஏக காலத்தில் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், இந்த வழக்கில் அதிகபட்ச தண்டனையான 2 வருடம் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி சிறையில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

