தண்டவாள அசைவு மற்றும் நகர்வினை பரிசோதிக்க இன்று மதுரையில் இருந்து போடிநாயக்கனூருக்கு சுமார் 110 கிலோமீட்டர் வேகத்தில் சோதனை ரயில் இயக்கப்பட்டது.
மதுரையில் இருந்து போடிநாயக்கனூருக்கு தினசரி காலையும், மாலையும் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. அதே போல, சென்னையில் இருந்து போடிநாயக்கனூருக்கு மதுரை வழியாகவும், போடிநாயக்கனூரில் இருந்து சென்னைக்கு மதுரை வழியாகவும் வாரத்தில் மூன்று நாட்கள் அதிவிரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தண்டவாளத்தின் அதிர்வு அசைவு மற்றும் குறைபாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக, மதுரையில் இருந்து போடிநாயக்கனூருக்கு சுமார் 110 கிலோமீட்டர் வேகத்தில் சோதனை ரயில் இயக்கப்பட்டது.
மதுரையில் இருந்து புறப்பட்ட சோதனை ரயில் போடிநாயக்கனூர் ரயில் நிலையம் வந்தடைந்தது. அந்த ரயிலில் என்ஜின் மற்றும் தண்டவாள அதிர்வு அறியும் கருவி பெட்டி ஒன்றும், அதிகாரிகள், பணியாளர்கள் உள்ள ஆய்வு பெட்டி ஒன்றும் இணைக்கப்பட்டு வந்தது.
வழக்கமாக ரயிலில் 110 கிலோ மீட்டர் வேகம் அங்கீகரிக்கப்பட்ட நிலையில், மதுரையிலிருந்து போடிநாயக்கனூர் வரை தற்போது 90 கி.மி. முதல் 100 கி.மீ வேகத்தில் வழக்கமாக ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், வேகத்தை அதிகரித்தால் இருப்புப் பாதைகளில் அதிர்வுகள் மற்றும் நகர்வுகள் எதுவும் உள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்வதற்காக இந்த சோதனை நடந்ததாக கூறப்படுகிறது.
இந்த சோதனை ரயில் மீண்டும் இன்று மாலை சுமார் 5 மணி அளவில் அதே வேகத்தில் போடிநாயக்கனூரில் இருந்து மதுரைக்கு புறப்பட்டு சென்றது.

