தஞ்சாவூர் அருகே தொன்மையான விஷ்ணு மற்றும் தேவி சிலைகளை கடத்திய 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு திருச்சி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாலமுருகன் தலைமையிலான தனிப்படை போலீசார், பிப்.6 ஆம் தேதி இரவு 10.30 மணியளவில் சென்னை- தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய வளையப்பேட்டை பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது, சாலை ஓரத்தில் சொகுசு கார் ஒன்று நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்தது. அதனை கவனித்த சிலை கடத்தல் தடுப்பு பிரிவு தனிப்படை போலீசார், விரைந்து சென்று சோதனை செய்தனர். அப்போது, காருக்குள் இருந்த சாக்குப்பையில் 2 சிலைகள் இருந்ததும், அவை தொன்மை வாய்ந்த சிலை என்பதும் தெரியவந்தது.
அந்த சிலைகள் தமிழ்நாட்டின் ஏதாவது கோயிலிலிருந்து திருடப்பட்டிருக்கலாம் என சந்தேகித்த போலீசார், காரை ஓட்டி வந்த நபர் மற்றும் உடன் இருந்த நபர் என இருவரை பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில், அவர்கள் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன் (41) மற்றும் ராமச்சந்திரன் (41) என்பது தெரியவந்தது. மேலும், அவர்களிடம் சிலைகளுக்கான எந்த ஒரு ஆவணங்களும் இல்லை என்பதும், இந்த சிலைகளை திருடி, அதிக தொகைக்கு வெளிநாடுகளுக்கு கடத்த முயன்றதும் அம்பலமானது.
அதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீசார் சிலைகள் குறித்து ஆய்வு செய்தனர். அப்போது, அது தொன்மையான மற்றும் அரிதான சுதர்சனர் என்கிற விஷ்ணு சிலை என்பதும், அந்த சிலை 77.300 கிலோ, 90 செ.மீ உயரம், 48 செ.மீ அகலமும் கொண்டிருந்தது. அதேபோல் மற்றொரு சிலை பெண் தெய்வம் தேவியின் சிலை. அந்த சிலை 35.450 கிலோ எடையும், 73 செ.மீ உயரமும், 31 செ.மீ அகலமும் இருந்துள்ளது. அதேபோல, பறிமுதல் செய்யப்பட்ட 2 சிலைகளும் 14-15ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த விஜய நகர பேரரசின் காலத்தை சேர்ந்தது என்பதும் தெரியவந்தது.
அவர்கள் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்த சிலை தடுப்பு பிரிவு அதிகாரிகள், சிலை கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரை பறிமுதல் செய்தனர். மேலும், இந்த சிலை கடத்தலில் வேறு யாருக்கெல்லாம் தொடர்புள்ளது என விசாரணை நடத்தினர். அதில், திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த முகிலன் (36), ஜான்சன் (41) ஆகிய இருவருக்கும் தொடர்புள்ளது தெரியவந்தது. இதையடுத்து, 4 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களை கும்பகோணம் கூடுதல் குற்றவியல் நடுவர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதுகுறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கூறியதாவது, “இந்த சிலை கடத்தல் வழக்கில் பல்வேறு நபர்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. எனவே, அவர்கள் குறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம். விசாரணைக்கு பிறகே பறிமுதல் செய்யப்பட்ட சிலை எந்த கோயிலிலிருந்து திருடப்பட்டது என்பது தெரியவரும்” என்றார்.

