ஊருக்குள் நுழையும் காட்டு யானைகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த கோவைக்கு கும்கி யானைகள் கொண்டுவர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியான மதுக்கரை, தொண்டாமுத்தூர், பெரியநாயக்கன்பாளையம், தடாகம் உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகளில் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருக்கின்றன. குறிப்பாக, இரவு நேரங்களில் உணவு மற்றும் தண்ணீர் தேடி அடிக்கடி யானைகள் ஊருக்குள் புகுவதால் அவற்றை கட்டுப்படுத்த வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். மேலும் காட்டு யானைகளை விரட்ட கோவையில் நிரந்தரமாக கும்கி யானைகள் நிறுத்தப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.
இதனைத் தொடர்ந்து, போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயலில் உள்ள யானைகள் முகாம் ரூ.8 கோடி செலவில் பல்வேறு நவீன வசதிகளுடன் புனரமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது. இதன்படி 50 ஏக்கர் பரப்பளவில் 18 புதிய யானைகள் ஷெட், 2 கரோல், 2 கி.மீ. தொலைவிற்கு சோலார் மின்வேலி, 40 சோலார் விளக்குகள், 3 சிறிய குட்டைகள், 8 யானை பாகன்கள் தங்கும் விடுதிகள், 5 யானைகள் குளிப்பதற்கான ஷவர், தண்ணீர் வசதி, கண்காணிப்பு கேமராக்கள், முகாமை சுற்றி அகழி மற்றும் சோலார் மின்வேலி உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன. இந்த முகாம் கடந்த டிசம்பர் மாதம் முதல் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
இந்நிலையில் கோவை சுற்றுவட்டார பகுதிகளில் ஊருக்குள் நுழையும் காட்டு யானைகள் விரட்டுதல், பிடித்தல் உள்ளிட்ட பணிகளுக்காக இந்த முகாமிற்கு கும்கி யானைகளை கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. பொதுவாக ஊருக்குள் புகும் யானைகளை விரட்ட டாப்சிலிப், முதுமலை பகுதிகளில் இருந்து கும்கி யானைகளை வரவழைக்கப்படுவதால் ஏற்படும் காலதாமத்தை தவிர்க்க வனத்துறையினர் இந்த முடிவை எடுத்தனர்.
இதற்காக முதன்மை தலைமை வனப் பாதுகாவலரிடம் கோவை வனத்துறை அதிகாரிகள் அனுமதி கேட்டிருந்தனர். அதன்படி 2 கும்கி யானைகளை டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து சாடிவயல் யானைகள் முகாமிற்கு கொண்டு வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து 2 கும்கி யானைகள் சாடிவயல் யானைகள் முகாமிற்கு கொண்டு வருவதற்கான பணிகளில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து கோவை மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் கூறுகையில், “சாடிவயல் யானைகள் முகாமில் முன்பு கும்கி யானைகள் பராமரிக்கப்பட்டு வந்ததோடு, கோவை சுற்றுவட்டார பகுதிகளில் கிராமங்களுக்குள் நுழையும் காட்டு யானைகளை விரட்டவும், பிடிக்கவும் பயன்படுத்தப்பட்டு வந்தன. தற்போது பல்வேறு வசதிகளுடன் புனரமைக்கப்பட்ட யானைகள் முகாம் திறக்கப்பட்டுள்ளது. இங்கு 2 கும்கி யானைகள் கொண்டு வருவதற்கான அனுமதி கிடைத்துள்ளது. விரைவில் அவை கொண்டு வரப்பட்டு, இங்கு வைத்தே பராமரிக்கப்படுவதோடு காட்டு யானைகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளிலும் ஈடுபடுத்தப்படும” என்றார்.

