ஐபிஎஸ் போட்டிகளில் இருந்து எம்.எஸ்.தோனி ஓய்வுபெறவுள்ளதாக பேச்சுகள் அடிபடும் நிலையில், இதுகுறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் (சிஎஸ்கே) முதன்மை செயல் இயக்குநர் காசி விஸ்வநாதன் கருத்து தெரிவித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து 2020-ல் ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி, ஐபிஎஸ் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார். 2025-ல் சிஎஸ்கே அணியின் செயல்திறன் மோசமாக இருந்ததால், ரசிகர்கள் தோனி மீது பல்வேறு விமர்சனங்களை வைத்தனர். இந்நிலையில், 2026 ஐபிஎல் போட்டி முடிந்ததும், தோனிஐபிஎல்-இல் இருந்தும் தனது ஓய்வை அறிவிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து சிஎஸ்கே அணியின் இயக்குநர் காசி விஸ்வநாதன் கருத்து தெரிவித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் அதிகாரப்பூர்வ AI பார்ட்னராக Bonbloc Ai நிறுவனம் இணைந்து செயல்படவுள்ளதை அறிவிக்கும் நிகழ்ச்சி, சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முதன்மை செயல் இயக்குநர் காசி விஸ்வநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய காசி விஸ்வநாதன், “19வது ஐபிஎல் சீசன் வரும் மார்ச் மாதம் தொடங்கவுள்ளது. எப்போதும் அனுபவம் வாய்ந்த வீரர்களையே ஏலத்தில் எடுக்கும் சிஎஸ்கே அணி, இம்முறை வழக்கத்திற்கு மாறாக இளம் வீரர்களை அதிகமாக எடுத்துள்ளது. ஆகையால், இந்த சீசனில் சிஎஸ்கே அணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜூனியர் வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள்” என்றார்.
மேலும், சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற T-20 கிரிக்கெட் போட்டியின் போது, மைதானத்திற்குள் ரசிகர்கள் விசில் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “இப்போதைக்கு அதை பற்றி நான் பேச முடியாது” எனக் கூறினார்.
இந்த சீசனில் எம்.எஸ்.தோனி அனைத்து போட்டிகளிலும் விளையாடுவாரா? என்ற கேள்விக்கு, “அதனை டீம் தான் முடிவெடுக்க வேண்டும். ஆனால், அனைத்து போட்டிகளிலும் தோனி விளையாட வேண்டும் என்பதுதான் எனது விருப்பம்” என்றார். தோனி ஓய்வு பெறப்போவதாக அடிபடும் பேச்சுகள் குறித்த கேள்விக்கு, “தோனி யாரிடமும் ஓய்வு பற்றி எல்லாம் பேச மாட்டார். அதை அவர்தான் முடிவெடுப்பார்” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், சிஎஸ்கே அணிக்கு விக்கெட் கீப்பர் யார்? அணியில் யார் யாருக்கு என்ன ரோல்? என்பதை கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ஸ்டீபன் பிளெமிங் தான் முடிவு செய்வார்கள்.
தேர்தல் காரணமாக சென்னையில் நடைபெறும் சிஎஸ்கே போட்டிகள் ராஞ்சிக்கு மாற்றப்படுவதாக வந்த தகவல்கள் வெறும் வதந்தியே. பிசிசிஐ இது பற்றி எந்த தகவல்களையும் எங்களிடம் தெரிவிக்கவில்லை. 2019 மக்களவைத் தேர்தலின் போதும் சென்னையில்தான் அனைத்து சிஎஸ்கே போட்டிகளும் நடைபெற்றன. ஆகையால், எனக்கு தெரிந்து இது உண்மையல்ல” என பதிலளித்தார்.

