“இரவில் என்னால் உறங்க முடியவில்லை” என்று பிரபல நடிகை மேடையில் கண்ணீர் விட்டு அழுதார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த 2001-ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான ‘பத்ரி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார் பூமிகா. அவருக்கு ‘ரோஜாக்கூட்டம்’ திரைப்படம் பரவலான அடையாளத்தை பெற்றுக் கொடுத்தது. கடைசியாக தமிழில் ‘பிரதர்’ மற்றும் ‘ஸ்கூல்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
தற்போது சிறிய இடைவெளிக்குப் பிறகு பூமிகா தெலுங்கில் நடிக்கும் படம், ‘Euphoria’. இந்தப் படத்தை குணசேகரன் இயக்கியுள்ளார். படம் கடந்த பிப்ரவரி 6-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படம் மூலம் சாரா அர்ஜூன் தெலுங்கில் நாயகியாக அறிமுகமாகிறார். முன்னதாக நடைபெற்ற இந்தப் படத்தின் புரமோஷன் விழாவில் பேசிய நடிகை பூமிகா மேடையில் கண்ணீர்விட்டு அழுதார்.
பூமிகா கூறுகையில், “பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்து இந்தப் படம் பேசுகிறது. இந்தப் படத்தில் நான் நடித்த கதாபாத்திரம் என்னை வெகுவாக பாதித்துள்ளது. அதன் காரணமாக இரவு 1 மணி அல்லது இரண்டு மணிக்கு எல்லாம் தூக்கத்திலிருந்து விழித்து விடுகிறேன். அந்த அளவுக்கு இந்த கதாபாத்திரம் என்னை பாதித்துவிட்டது” என்றார்.
சொல்லிக்கொண்டிருக்கும்போதே கண்ணீர் விட்டு அழுதார். பின்னர் தொடர்ந்து பேச முடியாமல் மைக்கை அருகிலிருந்தவர்களிடம் கொடுத்துவிட்டு நகர்ந்தார் பூமிகா. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

