செம்பனார்கோயில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ஒரே நாளில் மட்டும் சுமார் 650 குவிண்டால் நெல் சுமார் ரூ.15 லட்சத்திற்கு கொள்முதல் பரிவர்த்தனை செய்யப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சம்பா அறுவடைப் பணி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் அறுவடை செய்த நெல்லை விவசாயிகளின் நலன் கருதி செம்பனார்கோயில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் சார்பில் பண்ணை வர்த்தகம் மூலம் (பார்ம் டிரேடிங்) மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டத்தின்படி (இ-நாம்) கொள்முதல் பரிவர்த்தனை தொடங்கியது.
அதன்படி நேற்று செம்பனார்கோயில் அருகே பட்டாவரம், கடலி கிராமத்திலும் வல்லம் திருச்சம்பள்ளி ஒருங்கிணைந்த வேளாண் விளைபொருள் விற்பனை மையத்திலும் நெல் கொள்முதல் பணி நடைபெற்றது.
இதனை நாகை விற்பனைக் குழு செயலாளர் சந்திரசேகர் நேரடியாக விவசாயிகளின் இருப்பிடத்திற்கே சென்று விவசாயிகளிடம் கருத்துகளைக் கேட்டறிந்தார்.
தொடர்ந்து ஒழுங்குமுறை விற்பனைக்கூட அலுவலக பொறுப்பாளர் சிலம்பரசன் முன்னிலையில் நெல் கொள்முதல் பரிவர்த்தனை நடைபெற்றது. இதில் உமா ரக நெல் ஒரு குவிண்டால் அதிகபட்சமாக ரூ.2,400-க்கும், குறைந்தபட்சமாக ரூ.2,150-க்கும் சராசரியாக ரூ.2,200-க்கும் விலைபோனது.
ஒரே நாளில் மட்டும் சுமார் 650 குவிண்டால் நெல் சுமார் ரூ.15 லட்சத்திற்கு கொள்முதல் பரிவர்த்தனை செய்யப்பட்டது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

