சென்னையில் காகங்கள் அடுத்தடுத்து உயிரிழந்ததைத் தொடர்ந்து, பறவைக் காய்ச்சல் பரவுவதைத் தடுப்பதற்கு கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத் துறை பல்வேறு கட்டுப்பாடுகளையும், பாதுகாப்பு வழிமுறைகளையும் வெளியிட்டு உள்ளது.
சென்னை அடையாறு உள்ளிட்ட சில பகுதிகளில் கடந்த சில நாட்களாக காகங்கள் அதிகளவில் உயிரிழந்து வந்த நிலையில், அவற்றுக்கு வைரஸ் தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் உயிரிழந்த காகங்களின் மாதிரிகளில் ஆய்வு செய்த போது, அவற்றுக்கு ஹெச்5என்1 கிருமி (H5N1 வைரஸ்) தொற்று இருந்தது உறுதியாகியுள்ளது.
சென்னை அடையாறை சுற்றியுள்ள பகுதிகளில் காகங்கள் பறவை காய்ச்சலால் உயிரிழந்ததாக மத்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் உறுதி செய்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் பறவை காய்ச்சலை தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத்துறை பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளை வெளியிட்டுள்ளது.
பொதுமக்களுக்கான முக்கிய அறிவுறுத்தல்கள்
பறவைக் காய்ச்சல் அறிகுறி மற்றும் தடுப்பு முறைகள் குறித்து பொதுமக்கள் போதிய விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்
இறந்த பறவைகளை வெறும் கையால் தொடக்கூடாது
கையாளுவதற்கு முன் கையுறைகளை அணிய வேண்டும், பின்னர் கைகளை சோப்பு போட்டு நன்கு கழுவ வேண்டும்
காகங்கள் அல்லது காட்டுப் பறவைகள் மர்மமான முறையில் இறந்தால், உடனடியாக அருகில் உள்ள கால்நடை மருத்துவமனைக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்.
பறவைப் பண்ணைகளுக்கான பாதுகாப்பு முறைகள் (Biosecurity)
பண்ணை நுழைவுவாயில்களில் ‘கிருமிநாசினி கால் குளியல்’ அமைக்கப்பட வேண்டும்
உபகரணங்களை முறையாகச் சுத்தம் செய்ய வேண்டும்
பண்ணைக்குள் வெளி நபர்கள் மற்றும் வெளிப் பறவைகள் நுழைவதைத் தவிர்க்க வேண்டும்
ஒரு பண்ணையிலிருந்து மற்றொரு பண்ணைக்குப் பணியாளர்கள் அடிக்கடி செல்வதைத் தவிர்க்க வேண்டும்
வெவ்வேறு வயதுடைய பறவைகளை ஒரே இடத்தில் வளர்ப்பதைத் தவிர்க்க வேண்டும்
தீவனம் மற்றும் தண்ணீரை அவ்வப்போது பரிசோதனை செய்ய வேண்டும்
இறந்த பறவைகளை ஆழமாகப் புதைக்க வேண்டும் அல்லது எரிக்க வேண்டும்
இறைச்சிக் கழிவுகளைத் திறந்த வெளியில் கொட்டக்கூடாது.
சாலையோர இறைச்சிக் கடைகளைத் தவிர்த்து, முறையான பாதுகாப்பு வசதிகள் கொண்ட இறைச்சிக் கூடங்களைப் பயன்படுத்த வேண்டும். அங்கு தினசரி கிருமிநாசினி தெளிப்பது அவசியம்.
மாநில அல்லது சர்வதேச எல்லைகளில் பறவைகள் மற்றும் பறவை சார்ந்த பொருட்கள் கொண்டு செல்வதைக் கண்காணிக்க வேண்டும்.
எல்லைப் பகுதிகளில் 5 கி.மீ சுற்றளவிற்குத் தீவிர விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
கால்நடைத் துறை ஊழியர்கள் களத்தில் இறந்த பறவைகளுக்குப் பிரேதப் பரிசோதனை செய்யாமல், அவற்றை நேரடியாகப் பரிசோதனைக் கூடங்களுக்கு அனுப்ப வேண்டும்.
ஏதேனும் அசாதாரணமான முறையில் பறவைகள் உயிரிழந்தால், உடனடியாகத் தகவல் தெரிவிக்க மாவட்ட கால்நடைத்துறை அதிகாரிகளின் தொடர்பு எண்கள் அறிவிக்கப்படும்.
இவ்வாறு கால்நடை பராமரிப்புத் துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

